Published : 10 Mar 2024 11:21 PM
Last Updated : 10 Mar 2024 11:21 PM
புதுச்சேரி: புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் இன்று நடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு தலைமை தாங்கினார்.
ஊர்வலத்தை முன்னாள் முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்து பங்கேற்றார். வைத்தியநாதன் எம்எல்ஏ மற்றும் 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கையில் மெழுகுவர்த்தியுடன் ஊர்வலமாக சென்றனர். அண்ணா சிலை அருகில் தொடங்கிய ஊர்வலம் அண்ணா சாலை, நேரு வீதி வழியாக சென்று நேரு வீதி-மிஷன் வீதி சந்திப்பில் நிறைவடைந்தது.
பின்னர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: துரதிஷ்டவசமாக முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யாரும் சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்லவில்லை.
இது அந்த குடும்பத்தை மட்டுமல்ல புதுச்சேரி மாநில மக்களை அவமதிக்கின்ற வேலை.
சிறுமியின் வீட்டுக்கு சென்றால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தாய்மார்கள் தோளை உரித்து விடுவார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் தான் அவர்கள் போகவில்லை. அப்படி இருந்தாலும் கூட அஞ்சலி செலுத்த வேண்டிய கடமை பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு உண்டு. அதனை அவர்கள் செய்ய தவறிவிட்டார்கள்.
சிறுமியின் கொலைக்கு உரிய நீதி, நியாயம் கிடைக்க வேண்டும். இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டு யார், யார் சம்பந்தப்பட்டு உள்ளார்களோ அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களுக்கு மரண தண்டனை வாங்கி கொடுக்கின்ற வேலையை இந்த ஆட்சியாளர்கள் செய்ய வேண்டும்.
உங்களால் ஆட்சி செய்ய முடியவில்லை, மக்களை பாதுகாக்க முடியவில்லை என்றால் முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்ல வேண்டும் என்று ஏற்கெனவே இண்டியா கூட்டணி சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம்.
குறிப்பாக புதுச்சேரி மாநிலத்தில் மோடி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி அனைத்துமே பொய்யாகிவிட்டது. புதுச்சேரியை பெஸ்ட் மாநிலமாக (சிறந்த மாநிலம்) மாற்றுவதாக சொன்னார். ஒஸ்ட் மாநிலமாக (மோசமான மாநிலம்) மாற்றிவிட்டார். மோடி புதுச்சேரி மாநிலத்துக்கு நிதி கொடுப்பேன், பாதுகாப்பு கொடுப்பேன் என்றார். ஆனால், எதையுமே கொடுக்கவில்லை.
மத்தியில் பாஜக ஆட்சி, புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி என இரட்டை எஞ்சின் ஆட்சி வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்று சொன்னார். ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் கொலைகள் தான் நடக்கின்றன. கஞ்சா தாராளமாக விற்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த இந்த ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே இந்த ஆட்சியாளர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டும்.
சிறுமி கொலையில் காவல் துறை விசாரணையை இப்போது தான் ஆரம்பித்துள்ளனர். போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு 3 மாதத்தில் முடிக்கப்பட வேண்டும். அந்த சட்டத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.1 கோடி கொடுக்க வேண்டும். இந்த வழக்கில் 2 பேர் மட்டுமல்ல, எங்களுக்கு கிடைத்த தகவலின்படி பலர் இருக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட விவேகானந்தன் என்பவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் மாவட்ட பொறுப்பாளராக இருந்துள்ளார். அவர் பாஜக கட்சியைச் சேர்ந்தவர். அதற்கு பிறகு என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருந்துள்ளார். இரண்டு கட்சியிலும் அவர் இருந்துள்ளார். விவேகானந்தனை பாதுகாக்கவே சிறுமியின் கொலை வழக்கு காலதாமதமாகி இருக்கிறது.
காவல் துறையின் கையை கட்டிப் போட்டிருக்கிறார்கள். முறையான விசாரணை செய்தால் ஆட்சியாளர்களின் செயல்பாடுகள், நிறைய பூதாகரமான விஷயங்கள் வெளியே வரும். இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க இவர்களுக்கு என்ன கஷ்டம். சிபிஐ விசாரணை நடத்தினால் பாரபட்சமின்றி விசாரணை நடைபெறும். சிறுமியின் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தவிரவிட வேண்டும்.
புதுச்சேரியில் கஞ்சா கட்டுப்படுத்தப்படவில்லை. துணைநிலை ஆளுநர் விவரம் தெரியாமல் பேசுகின்றார். அவர் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள் என்கிறார். நாங்கள் அரசியல் செய்யவில்லை. மக்களின் கொதிப்புக்கு உறுதுணையாக இருக்கின்றோம்.
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுப்போம் என்று பிரதமர், ஆளுநர் சொன்னார்கள். ஆனால், என்ன பாதுகாப்பு கொடுக்கின்றனர். அரசாங்கத்தை முடக்குகின்ற வேலையை ஆளுநர் செய்து வருகின்றார். அவர் எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT