‘திமுகவுக்கு கமல் தேவை என்பதால் கூட்டணியில் சேர்த்துள்ளனர்’ - குஷ்பு விமர்சனம்

ஏ.சி.சண்முகம் மற்றும் குஷ்பு
ஏ.சி.சண்முகம் மற்றும் குஷ்பு
Updated on
2 min read

வேலூர்: மோடி தமிழகத்துக்கு வருவதை பார்த்து திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. திமுக கூட்டத்துக்கு கமல் தேவை என்பதால் அவரை கூட்டணியில் சேர்த்துள்ளனர் என குஷ்பு தெரிவித்தார்.

வேலூர் தொரப்பாடியில் 27,000 சதுர அடி நிலப்பரப்பில் ஏசிஎஸ் இலவச திருமண மண்டபம், இலவச மருத்துவ மையம், இலவச வேலைவாய்ப்பு தகவல் மையம் மற்றும் இலவச கணினி பயிற்சி மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் குஷ்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ‘‘வரும் மக்களவை தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில் பாஜக வெல்லும்.

கமல்ஹாசனுக்கு திமுக ராஜ்யசபா சீட் கொடுத்துள்ளனர். திமுக கட்சியில் பிரச்சாரம் செய்ய யாரும் இல்லை. கமல்ஹாசன் போல ஒரு முகம் தேவை. அதைத்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறாரா?

பிரச்சாரத்துக்கு முதல்வர் போனாலும் கூட்டம் வராது. கமல் தேவை என்பதால் அவர்கள் கூட்டணியில் சேர்த்துள்ளனர். இந்தியா முழுவதும் காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் இணைகிறார்கள். அதற்குக் காரணம் பிரதமர் மோடி மீது வைத்துள்ள நம்பிக்கை. கடந்த 65 ஆண்டு காலத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் செய்ய முடியாததை கடந்த 10 வருடத்தில் மோடி செய்து காண்பித்துள்ளார். இதுதான் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் உள்ள வித்தியாசம்.

தமிழகத்தில் 1967-க்கு பிறகு ஏன் காங்கிரஸ் சொந்த காலில் நிற்க முடியவில்லை. காமராஜர் பெயரை வைத்து காங்கிரஸ் பிச்சை எடுக்கிறார்கள். திமுக அல்லது அதிமுக இரண்டுடன் சேர்ந்து காங்கிரஸ் பயனடைந்து கொண்டிருக்கிறது. தைரியம் இருந்தால் தமிழகத்தில் தனியாக நின்று இருக்கலாமே, ஏன் செய்யவில்லை.
அமலாக்கத் துறை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சுதந்திரமாக செயல்படுகிறார்கள்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கைது செய்துள்ளனர். ஜாபர் சாதிக் யாருடைய பின்னனியில் உள்ளார். திமுக தானே அதற்கு காரணம். ஜாபர் சாதிக்கை கட்சியிலிருந்து நீக்கி விட்டால் வேலை முடிந்து விட்டதா. இப்போ தானே கைதாகி உள்ளார். தொடர்புடையவர்களின் பெயரெல்லாம் இனிமேல் தானே தெரிய வரும். வரட்டும் அதன் பிறகு பேசுவோம்.

பிரதமர் மோடி தமிழகம் வருவதை பார்த்து திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. பிரதமர் மோடி வரும் போது தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சி உள்ளது. மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுகிறேனா என கேட்கின்றனர். பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் நட்டா ஆகியோர் எங்கு நிற்க சொன்னாலும் நான் நிற்பேன். நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய சொன்னாலும் இறங்கி பிரச்சாரம் செய்வேன். கட்சிக்காக நான் வேலை செய்ய வருகிறேன்.

வேலூர் தொகுதியில் ஏ.சி.சண்முகம் நிச்சயம் வெற்றி பெறுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. சினிமாவில் இருந்து நிறைய பேர் அரசியலுக்கு வந்துள்ளார்கள். எம்ஜிஆரில் தொடங்கி, கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த், கமல்ஹாசன் தற்போது விஜய் வரை அனைவருக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு மற்றும் அன்பு இருக்கிறது.

உதயநிதி ஸ்டாலினும் சினிமாவில் ஹீரோவான பிறகு தானே அரசியலுக்கு வந்தார். ஏன் முதல்வர் மு.க.ஸ்டாலினும் நடிகனாக வேண்டுமென்று தானே ஆசைப்பட்டார். அதற்குப் பிறகுதானே அரசியலுக்கு வந்தார்.

எம்ஜிஆரின் இடத்தை விஜய் நிரப்புவாரா ? என கேட்கின்றனர். நடிகர் விஜய் புதிதாக வந்துள்ளார். அவரை ஏன் எம்ஜிஆருடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். முயற்சி செய்து வரட்டும். வரும் 2026 ல் அதைப்பற்றி பேசுவோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in