Published : 10 Mar 2024 09:51 PM
Last Updated : 10 Mar 2024 09:51 PM
சேலம்: சேலத்தில் திரையரங்கில் குழந்தையின் 2 பவுன் தங்கக் காப்பு தொலைந்து போய், குப்பையோடு கலந்து விட்ட நிலையில், அதனை தேடி மீட்டுக் கொடுத்த தூய்மைப் பணியாளர்களின் செயல், பலரின் பாராட்டுதலை பெற்றுள்ளது.
சேலம் சூரமங்கலத்தில் உள்ள திரையரங்கில், இரு தினங்களுக்கு முன்னர் தம்பதியர் ஒருவர் குழந்தையுடன் சினிமா பார்த்துவிட்டு சென்றனர். மறுநாள் காலையில் குழந்தையை கவனித்த பெற்றோர், அக்குழந்தையின் ஒரு கையில் தங்கக் காப்பு இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சுமார் 2 பவுன் எடை கொண்ட தங்கக் காப்பு காணாமல் போனதால், துடிதுடித்த அவர்கள், உடனடியாக, திரையரங்கு நிர்வாகிகளை சந்தித்து, விவரத்தை தெரிவித்தனர்.
இதையடுத்து, திரையரங்கில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த திரையரங்கு நிர்வாகத்தினர், பெற்றோருடன் வந்த குழந்தையின் கையில் தங்கக் காப்பு இருந்ததையும், திரையரங்கை விட்டு வெளியேறும்போது, தங்கக் காப்பு இல்லாததையும் கண்டறிந்தனர். இந்நிலையில், அதிகாலையிலேயே, திரையரங்கு முழுவதும் பெருக்கப்பட்டு, சேகரிக்கப்பட்ட குப்பை முழுவதும், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதும் தெரியவந்தது.
எனவே, திரையரங்கு நிர்வாகத்தினர், சேலம் மாநகராட்சியின் சூரமங்கலம் மண்டல சுகாதாரப் பிரிவு கண்காணிப்பாளர் குமரேசனிடம் தகவல் தெரிவித்தனர். அவர், திரையரங்கில் இருந்து, குப்பையை எடுத்துச் செல்லும் வாகனத்தில் இருந்த தூய்மைப் பணியாளர்களை தொடர்பு கொண்டு, குப்பைக் கிடங்குக்கு வாகனத்தை கொண்டு செல்லாமல் தடுத்து, அந்த குப்பையில் குழந்தையின் தங்கக் காப்பு இருக்கிறதா என்று தேடிப்பார்க்க அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களான மணிவேல், கண்ணன், வாகன ஓட்டுநர் மூர்த்தி ஆகியோர், வாகனத்தை உழவர் சந்தை அருகே நிறுத்திவிட்டு, அதில் இருந்த குப்பையை சிறிது சிறிதாக கீழே கொட்டி, அவற்றில் தங்கக் காப்பு ஏதேனும் இருக்கிறதா என்று சுமார் 2 மணி நேரம் வரை, அக்கறையுடன் தேடினர். அவர்களின் உழைப்புக்கு கிடைத்த பலனாக, குப்பையில் இருந்த தங்கக் காப்பு அவர்களின் கைகளில் கிடைத்தது.
இதன் பின்னர் தகவல் கொடுத்து, குழந்தையின் பெற்றோரை வரவழைத்து, அவர்களிடம் தூய்மைப் பணியாளர்களின் கைகளாலேயே, மீட்டெடுக்கப்பட்ட தங்கக் காப்பு ஒப்படைக்கப்பட்டது. குழந்தையிடம் இருந்த தங்கக் காப்பு காணாமல் போனதால், சென்டிமென்ட்டாக மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த பெற்றோர், அந்த காப்பு திரும்பக் கிடைத்ததா, எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தனர்.
அதனை மீட்டுக் கொடுத்த தியைரங்கு நிர்வாகிகள், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். தூய்மைப் பணியாளர்களின் செயல், பலரிடமும் பாராட்டுதலை பெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT