Last Updated : 10 Mar, 2024 06:01 PM

 

Published : 10 Mar 2024 06:01 PM
Last Updated : 10 Mar 2024 06:01 PM

பேரிடர் நிதி வழங்காத பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு தார்மீக உரிமை இல்லை - இரா. முத்தரசன்

இரா.முத்தரசன் | கோப்புப்படம்

கோவை: "இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை ஒரு பைசா கூட நிவாரண நிதி வழங்கப்படவில்லை. எனவே பிரதமர் மோடி தமிழகத்துக்கு வர தார்மீக ரீதியாக உரிமை இல்லை" என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் கூறியுள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: "நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் காப்பாற்றப்படும். இண்டியா கூட்டணி ஏற்பட ஸ்டாலின் தான் முக்கிய காரணம். பிஹார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொகுதி உடன்பாடுகள் நல்ல முறையில் ஏற்பட்டுள்ளன. மூன்று பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தில் ஏற்கெனவே ஒருவர் ராஜினாமா செய்து விட்டார். தற்போது அருண் கோயலும் ராஜினாமா செய்திருக்கிறார். எனவே நாடாளுமன்றத் தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறுமா? என்ற ஒரு மிகப்பெரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரம் மூலம் மிகப்பெரிய அளவில் ஆதாயம் பெற்ற கட்சி பாரதிய ஜனதா கட்சி. பாரத ஸ்டேட் வங்கி கால அவகாசம் கேட்டுள்ளதற்கு பிரதமர் மோடி தான் காரணம். எனவே ஊழல் பற்றி பேசுவதற்கு அவர் தகுதி அற்றவர். வைர வியாபாரி நீரவ் மோடி போன்றவர்கள் தான் மோடியின் நண்பர்கள். இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை ஒரு பைசா கூட நிவாரண நிதி வழங்கப்படவில்லை.

எனவே பிரதமர் மோடி தமிழகத்துக்கு வர தார்மீக ரீதியாக உரிமை இல்லை. கேரளாவில் இண்டியா கூட்டணி தான் போட்டியிடுகிறது. யார் போட்டியிட்டாலும் அந்த வெற்றி இண்டியா கூட்டணியின் வெற்றிதான்." இவ்வாறு முத்தரசன் கூறினார். இந்த சந்திப்பின்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் நா. பெரியசாமி, மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x