Published : 10 Mar 2024 04:17 PM
Last Updated : 10 Mar 2024 04:17 PM
கோவை: "கமல்ஹாசனின் பல படங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் இணை தயாரிப்பாளராக செயல்பட்டு வந்ததால், அவர் திமுக பக்கம் சாய்ந்துவிடுவார் என்பது ஏற்கெனவே தெரிந்த ஒன்றுதான். திமுக உதவியுடன் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில், மநீம நாடாளுமன்றத்துக்குள் செல்வது வேதனைக்குரியது." என்று, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தாா். அப்போது அவர் கூறியதாவது: "மூத்த சினிமா நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். தற்போது மீண்டும் திமுகவுடன் இணைந்துள்ளார். அரசியல் என்பது கடினமானது என்பதை இந்நடவடிக்கை காட்டுகிறது.
திமுகவுடன் இணைவது அவரது முடிவு. மாற்றத்தை எதிர்பார்த்து பலர் அவர் பின்னால் வந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் கட்சி தொடங்குவதற்கு முன்பு இருந்த பழைய நிலைக்கே சென்று விட்டார். தீய சக்தி திமுக இல்லாத ஆட்சி தமிழகத்தில் வர வேண்டும் என்றால் பாரதிய ஜனதா கட்சியால் தான் முடியும் என மக்கள் பேச தொடங்கியுள்ளனர். பல அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
அரசியலில் கமல்ஹாசன் முயற்சி எடுத்து பார்த்துள்ளார் என்பதுதான் புரிகிறது. கமல்ஹாசனின் பல படங்களுக்கு இணை தயாரிப்பாளராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வந்ததால் அவர் திமுகவசம் சாய்ந்துவிடுவார் என்பது முன்னரே தெரிந்த ஒன்றுதான். திமுக உதவியுடன் மாநிலங்களவை பதவியில், மக்கள் நீதி மய்யம் கட்சி நாடாளுமன்றத்துக்குள் செல்வது வேதனைக்குரியது. கமல்ஹாசன் சரியான பக்கம் இருந்திருந்தால் அவருக்கான அரசியல் வெகுமதிகள் எப்போதோ கிடைத்திருக்கும். தமிழகத்தில் இன்று மாற்றத்துக்காக தனித்த ஒரே கட்சியாக உள்ளது பாஜக மட்டும்தான்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT