Published : 10 Mar 2024 02:02 PM
Last Updated : 10 Mar 2024 02:02 PM
சென்னை: கோடை வெயில் அதிகரித்துள்ளதால் பகல் 11 முதல் பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. அதிகப்படியான வெயிலால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கோடை காலத்தில் பொது மக்கள் பின்பற்ற வேண்டிய மற்றும் பின்பற்றக் கூடாதவை குறித்த வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: உடலில் நீர்ச் சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஓஆர்எஸ், எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் அதிகம் குடிக்க வேண்டும். பருவகால பழங்கள், காய் கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட வேண்டும். அதிக வெயில் நேரங்களில் வெளியே செல்லாமல் முடிந்தவரை வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருப்பதுடன், மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியே செல்லும் போது, காலணிகளை அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது குடை கொண்டு செல்ல வேண்டும். குறிப்பாக, பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை தேவைஇல்லாமல் வெளியே செல்லக்கூடாது. வெறுங்காலுடன் வெளியே செல்ல வேண்டாம். குழந்தைகளை மதிய வேளையில் வீட்டின் வெளியே விளையாட அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT