Published : 10 Mar 2024 12:32 PM
Last Updated : 10 Mar 2024 12:32 PM
சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார். இன்றைய தினம் நேர்காணலை முடித்துவிட்டு ஓரிரு நாட்களில் திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸூக்கு 9 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் திமுக 21 தொகுதிகளில் நேடியாக போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இருப்பினும், அந்த 21 தொகுதிகள் எவை என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
இ்நநிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் திமுக சார்பில் இன்று நேர்காணல் நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தலில் தமிழகம் 39 தொகுதிகள், புதுச்சேரி ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட 2,984 மனுக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விருப்ப மனு அளித்தவர்களிடம் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தினார். அப்போது கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு ஆகியோர், ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியாக விருப்ப மனு அளித்தவர்களைச் சந்தித்து நேர்காணல் நடத்தினர்.
இந்த நேர்காணலில் பங்கேற்றுள்ள வேட்பாளர்களிடம் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, கள சூழல் மற்றும் தேர்தல் பணி குறித்த விவரங்களை முதல்வர் ஸ்டாலின் கேட்கிறார். மேலும், நேர்காணலுக்கு வந்த வேட்பாளர், கட்சிக்காக முந்தைய காலங்களில் செய்த பணிகள் குறித்தும் விருப்பமனு அளித்துள்ள வேட்பாளர்களிடம் முதல்வர் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், இன்றைய தினமே நேர்காணலை நடத்தி முடித்துவிட்டு, ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியல் வெளியிட திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நேர்காணலில், விருப்பமனு அளித்தவர்களின் ஆதரவாளர்கள், பரிந்துரையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT