Published : 09 Mar 2024 01:27 PM
Last Updated : 09 Mar 2024 01:27 PM
சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி. எனினும், மநீம மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக மாநிலங்களவை தேர்தலில் அக்கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்படும் என்று திமுக ஒப்பந்தம் செய்துள்ளது.
திமுக கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணையவிருப்பதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளியாகிவந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் கமலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வெளிப்படுத்தி இருந்தார்.
தொடர்ந்து திமுக உடன் மக்கள் நீதி மய்யம் மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக சொல்லப்பட்ட நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்தார்.
அவரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன், தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்துகொண்டார்.
அதன்படி, திமுக கூட்டணியில் இணைந்துள்ள மநீம மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக மாநிலங்களவை தேர்தலில் அக்கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்படும் என்று திமுக ஒப்பந்தம் செய்துள்ளது. அதற்கு பதில் மக்கள் நீதி மய்யம் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளும் என்றும் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT