Last Updated : 09 Mar, 2024 11:08 AM

6  

Published : 09 Mar 2024 11:08 AM
Last Updated : 09 Mar 2024 11:08 AM

‘அச்சம் வேண்டாம், நாங்கள் இருக்கிறோம்’ - வடமாநில இளைஞர்களுக்கு கிருஷ்ணகிரி கிராம மக்கள் ஆறுதல்

கிருஷ்ணகிரி அருகே குழந்தைகள் கடத்த வந்ததாக நினைத்து தாக்குதலுக்கு உள்ளாகி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வடமாநில இளைஞர்களை பெத்தாளப்பள்ளி கிராம மக்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே குழந்தை கடத்த வந்ததாக நினைத்து, தவறான புரிதல் காரணமாக தாக்கி விட்டோம், உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞர்களுக்கு கிராம மக்கள் ஆறுதல் கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்தாளப்பள்ளி, செம்படமுத்தூர், துறிஞ்சப்பட்டி, மாதேப்பட்டி கிராமத்தில் கடந்த 6ம் தேதி குழந்தைகள் கடத்தும் கும்பல் வந்துள்ளதாக தகவல் பரவியது. இதனால் இக்கிராமங்களில் சுற்றித் திரிந்த 5 இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இச்சம்பவம் சமூகவலைவளத்தில் வேகமாக பரவியது.

இதையடுத்து போலீஸார் 5 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் அவர்கள், அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த கமல் ஹூசைன்(30), நிசாம் அலி(26), முகம்மது மெசுதீன்(30), ஆஷ் முகமது(27) சோகித் அலி என தெரிந்தது. இவர்கள் 5 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி அடுத்த தேவசமுத்திரத்தில் தங்கி, ஆட்டோவில் சென்று குப்பை, மது பாட்டில்களை சேகரித்து, அதில் கிடைக்கும் வருமானம் மூலம் வாழ்ந்து வந்தது தெரிந்தது.

வடமாநில இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் 25-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து தொடர்புடைய 10 பேரை கைது செய்துள்ளனர். இதேபோல் குழந்தையை கடத்த வந்ததாக, செம்படமுத்தூர் அருகே உள்ள மெட்டுபாறை கிராமத்தை சேர்ந்த சவுமதி(25) அளித்த புகாரின் பேரில், நிசாம்அலி(26) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அச்சமும், ஆறுதலும்: இந்நிலையில் பெரியதாளப்பள்ளி ஊராட்சி தலைவர் அம்சவள்ளி வெங்கடேசன், கவுன்சிலர் அமரவாதி முனிராஜ், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சோமு ஆகியோர் நேற்று இரவு (8ம் தேதி) கிருஷ்ணகிரி டிஎஸ்பி தமிழரசி, தாலுகா காவல் ஆய்வாளர் குலசேகரன் மற்றும் போலீஸாருடன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் வடமாநில இளைஞர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது, "மொழி புரிதல் இல்லாததாலும், தவறான புரிதல் உள்ளிட்டவையால் தாக்குதல் சம்பவம் நடந்துவிட்டது. உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் அச்சம் அடைய வேண்டாம். இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது உங்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறோம்" என ஆறுதல் கூறினார். மேலும், சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களுக்கு நிதி உதவியும், பழங்கள் உள்ளிட்டவை வழங்கினர்.

1077 புகார் அளிக்கலாம்: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு கூறும்போது, "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செம்படமுத்தூர், துறிஞ்சிப்பட்டி மற்றும் தாளாப்பள்ளி கிராமத்தில் கடந்த 6ம் தேதியன்று குழந்தைகள் கடத்த வந்ததாக கருதி 5 வடமாநிலத்தவர்கள் தாக்கப்பட்டனர். மேற்கண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் மேற்கண்ட 5 வடமாநில இளைஞர்கள், துறிஞ்சப்பட்டி மற்றும் தாளாப்பள்ளி கிராமங்களில் தங்கி, பழைய பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

எனவே, இது போன்ற போலியான செய்திகளை கேட்டறிந்து வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீதும், போலியான செய்திகளை வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் பொதுமக்களுக்கு தெரியவந்தால், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

அத்துடன் அருகில் உள்ள காவல் நிலையத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். எனவே, பொதுமக்கள் யாரும் வதந்திகளை நம்பி தாக்குதல் நடத்தக் கூடாது"என்றார்

காவல்துறை விழிப்புணர்வு: கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் டிஎஸ்பி தமிழரசி தலைமையில், இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்பிரபு, எஸ்.ஐ.க்கள் செல்வராசு, செல்வராஜ், சத்தியன் மற்றும் போலீஸார் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களிடம், "தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்துகின்றனர் என்பது போலியான வதந்தியாகும். போலியான செய்திகளை கேட்டும், காணொளிகளை பார்த்தும் பொதுமக்கள் அச்சப்படவோ, பதட்டப்படவோ தேவையில்லை.

மக்கள் தங்கள் பகுதியில் சந்தேகப்படும்படி யாரையாவது கண்டால், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். காவல்துறையினரால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, போலியான வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்புதல் சட்டப்படி குற்றமாகும். பொய்யான வதந்திகளை நம்பி, வடமாநிலத்தவர்களை தாக்கினால், தாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிககை எடுக்கப்படும்: என்று அச்சிடப்பட்டிருந்த துண்டு பிரசுரங்களை ஆட்டோக்களில் ஒட்டியும், பொதுமக்களிடம் விநியோகம் செய்தும் பிரசாரம் மேற்கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x