Published : 09 Mar 2024 06:33 AM
Last Updated : 09 Mar 2024 06:33 AM
சென்னை: தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவோராக மாற்றும் நோக்கில் 213 தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவு நீர்அகற்றும் ஊர்தி வாங்க கடனுதவிக்கான ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர்அகற்றும் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவோர்களாக மாற்றுவதற்கான உன்னத நோக்கத்தின் அடிப்படையிலும், தூய்மைப்பணியில் ஈடுபட்டுள்ள பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் நேரடியாக கழிவு நீர் அகற்றும் பணி செய்வதைத் தவிர்க்கும் பொருட்டும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ரூ.61.29 கோடி மானியம்: இத்திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியமாகவும், புதிய தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் இதர பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 40 சதவீதம் மானியமாகவும், என213 பேருக்கு ரூ.125.86 கோடிதிட்ட மதிப்பில், ரூ.61.29 கோடி மானியமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, 213 தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திக்கான கடனுதவிக்கான ஆணைகளை வழங்கும் அடையாளமாக, 5 தூய்மை பணியாளர் களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தா.கார்த்திகேயேன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலர் அர்ச்சனா பட்நாயக், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டி.ஜி. வினய், பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குராலா, தொழில் ஆணையர் மற்றும் இயக்குநர் எல். நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT