Published : 09 Mar 2024 06:35 AM
Last Updated : 09 Mar 2024 06:35 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, "போதைப் பொருள் நடமாட்டத்தில், தமிழகத்தின் ஜாபர் சாதிக் கூட்டாளிகள், புதுச்சேரியில் அரசியல் கட்சியுடன் தொடர்பு உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களைக் கண்டறிந்து, இரும்புக் கரம் கொண்டுஅடக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்" என்றார். இது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன், ஜாபர் சாதிக்குடன் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.
இது தொடர்பாக ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நான் கடந்த 20 ஆண்டுகளாக தொழிற்சாலைகள் நடத்தி வருகிறேன். 2017-ல் ‘ஈரம் பவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளையைத் தொடங்கி, சமூகநலப் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து வருகிறேன். திரைப்படத் துறையில் இணை தயாரிப்பாளராகவும் உள்ளேன்.
எனது நெருங்கிய நண்பரான திரைப்பட இயக்குநர் அமீர் மூலம், சில படங்களின் தயாரிப்பில் பணிபுரிந்து வருகிறேன். நாங்கள் 'மாயவலை' என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தோம். அந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு, அமீரின் நண்பராக ஜாபர் சாதிக் வந்திருந்தார். அதில் நானும் கலந்து கொண்டேன். அப்போது அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை, எனது அரசியல் எதிரிகள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு, தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.
அமீருக்கு பல நண்பர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஜாபர் சாதிக்கும் ஒரு நண்பர். எனக்கும், ஜாபர் சாதிக்குக்கும் எந்தவிதமான நேரடித் தொடர்பு கிடையாது. இது தொடர்பாக என்னிடம் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை. விசாரணைக்கு அழைத்தால், நிச்சயம் முழு ஒத்துழைப்பு வழங்குவேன்.
என்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது சைபர் க்ரைம் போலீஸ்மற்றும் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளேன். எனது செயல்பாடுகள் இன்னும் வேகமாக இருக்கும். காங்கிரஸ் கட்சி மேலும் வளர்ச்சியடையப் பாடுபடுவேன். இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT