Published : 09 Mar 2024 06:09 AM
Last Updated : 09 Mar 2024 06:09 AM

பாரத விழாக்களில் மகா சிவராத்திரி முக்கியமானது: ஈஷா யோகா மைய விழாவில் குடியரசு துணைத்தலைவர் பெருமிதம்

ஈஷா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், ஆளுநர்கள் ஆர்.என்.ரவி, இந்திரசேனா ரெட்டி உள்ளிட்டோரை வரவேற்றுப் பேசிய ஈஷா நிறுவனர் சத்குரு.படம்: ஜெ.மனோகரன்

கோவை/காளஹஸ்தி: மகா சிவராத்திரி பாரதத்தின் திருவிழாக்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார்.

நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் தஞ்சை பெரிய கோயில்,திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உட்பட அனைத்து சிவன் கோயில்களிலும் நேற்று இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன.

கோவை ஈஷா யோகா மையத்தில் 30-ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா நேற்று மாலை தொடங்கியது. சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், மனைவி சுதேஷ் தன்கருடன் பங்கேற்றார்.

அவரை வரவேற்ற ஈஷா நிறுவனர் சத்குரு, அங்குள்ள சூரிய குண்டம், நாக சன்னதி, லிங்க பைரவி கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்றார். தொடர்ந்து, தியானலிங்கத்தில் சத்குரு தலைமையில் நடந்த பஞ்சபூத கிரியையில் பங்கேற்றார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, திரிபுரா மாநில ஆளுநர் இந்திரசேனா ரெட்டி, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, ஆதியோகி சிலை அமைந்துள்ள இடத்துக்கு வந்த குடியரசு துணைத் தலைவர், அங்குள்ள யோகேஸ்வர லிங்கத்துக்கு கைலாச தீர்த்தத்தை ஊற்றி வழிபாடு நடத்தினார். பின்னர், மகா சிவராத்திரி விழாவுக்கான யாக வேள்வியை தொடங்கிவைத்தார். விழாவில், அனைவரையும் சத்குரு வரவேற்றார். தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியதாவது:

இந்த மகாசிவராத்திரி விழா கொண்டாட்டத்தை நான் மறக்க முடியாது. மகா சிவராத்திரி பாரதத்தின் திருவிழாக்களில் மிகவும்முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

நடப்பாண்டு மகா சிவராத்திரி விழா, சர்வதேச மகளிர் தினத்தில் வந்துள்ளது. இந்த பூமிக்கும், மனித குலத்துக்கும் ஏற்படும்சவால்களுக்கு தீர்வு காண்பதற் கான முன்னெடுப்புகளை சத்குருமேற்கொள்கிறார். மகா சிவராத்திரி விழா உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு பெரிய உத்வேகத்தை அளிக்கிறது. மக்களின் மனதில் நம்பிக்கை, சாத்தியங்கள் பிறக்கின்றன. ஆதியோகி சிவனின் மகத்தான உருவம். இந்த ஆதியோகி பாரதத்தின் பொக்கிஷமாக இருக்கிறது. இங்கு வந்ததை காசிக்கு சென்றதைப்போல உணர்கிறேன்.

இந்தியாவின் பொருளாதாரம் 10 வருடங்களுக்கு முன்னர் பின்தங்கியிருந்தது. அடுத்த 2 ஆண்டுகளில் ஜெர்மன், ஜப்பான் நாடுகளின் பொருளாதாரத்தை தாண்டி முன்னேறி, உலகில் 3-வதுஇடத்துக்கு வரும் என உறுதிஅளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நடிகைகள் தமன்னா, கங்கனா ரணாவத் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ஆந்திரா, தெலங்கானாவில்... மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆந்திரா, தெலங்கானாவில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் அதிகாலை முதலே திரளான பக்தர்கள் திரண்டு சுவாமியை வழிபட்டனர்.

வாயு தலமான ஸ்ரீகாளஹஸ்தியில் நீண்ட வரிசையில் காத்திருந்து காளத்திநாதரை வழிபட்டனர். இங்கு பிரம்மோற்சவ விழாவும் நடைபெற்று வருவதால், நேற்று காலை உற்சவ மூர்த்திகள் நகரின் முக்கிய வீதிகளில் உலாவந்தனர். நேற்று நள்ளிரவு லிங்கோத்பவ தரிசனம் நடைபெற்றது.

இதேபோல, ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயிலிலும் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டு சுவாமியை வழிபட்டனர். இரவு சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. காக்கிநாடா சாமர்லகோட்டா சாளுக்க குமார ராமபீமேஸ்வர சுவாமி திருக்கோயில், வேமுலவாடா திருக்கோயில், தெலங்கானாவில் உள்ள பிரசித்தி பெற்ற ராமப்பா கோயிலிலும் திரளான பக்தர்கள் மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டு, சுவாமியை வழிபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x