Published : 08 Mar 2024 06:49 PM
Last Updated : 08 Mar 2024 06:49 PM

குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு 'பட்டப்பெயர்' வைக்கக் கூடாது: காவல் துறைக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு பட்டப்பெயர் வைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என காவல் துறைக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரும்பாக்கம் காவல் துறையினர், கடந்த 2022-ம் ஆண்டு 22 வயதான சரவணன் என்பவரை கைது செய்தனர். இவர், அந்த ஆண்டு ஜூலை மாதம், சூளைமேடு பகுதியில் வழிப்பறி செய்ததோடு, கற்களைக் கொண்டு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் அவர் மீது வழக்குப் பதிவுப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் பெயரை ‘குரங்கு’ சரவணன் என முதல் தகவல் அறிக்கையில் காவல் துறை குறிப்பிட்டுள்ளதற்கு நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

ஒருவரது பெயரை மாற்றுவதுஅவர்களுடைய சொந்த விருப்பமாக இருக்க வேண்டும். காவல் துறையினர் மரியாதை குறைவான பெயர்களை வைக்கக் கூடாது, எனக் கூறி வழக்கு ஆவணங்களில் இருந்த "குரங்கு" என்ற வார்த்தையை நீக்கி உத்தரவிட்டார்.

மேலும், பெயர் என்பது நம் அடையாளத்தின் முக்கிய பகுதி. தனிப்பட்ட, கலாச்சார, குடும்ப, வரலாற்று தொடர்புகளை ஆழமாக எடுத்த செல்பவை பெயர்கள்தான். இதுபோன்ற பட்டப் பெயர்களை வைப்பது வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் மனித உரிமையை, அவர் நிரபராதி என கருதப்படுவதற்கான உரிமையை மீறும் வகையில் உள்ளது.

இதுபோன்ற அடைமொழிகளை வைத்து அழைக்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும். அதற்கான உரிய அறிவுறித்தல்களை காவல்துறை உயர் அதிகாரிகள் வழங்க வேண்டும்.

இந்த வழக்கில், பொது அமைதிக்கு இடையூறு ஏற்பட்டதற்கான சாட்சிகள் இல்லை. ஒரு செ.மீ அளவு கூட இல்லாத மூன்று கற்களைப் பயன்படுத்திக் கூட்டத்தை அச்சுறுத்தினார் என்ற கதையை எல்கேஜி, யுகேஜி குழந்தைகள் கூட நம்பாது.மேலும், வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் நம்பகத்தன்மை அற்றவையாக உள்ளதாகக் கூறி, சரவணனை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x