Published : 08 Mar 2024 05:36 PM
Last Updated : 08 Mar 2024 05:36 PM
புதுச்சேரி: புதுச்சேரி - விழுப்புரம் இடையிலான ரயில் போக்குவரத்து வசதியை விரிவுபடுத்துவது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வுக்கு, புதுச்சேரி ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆந்திர மாநிலம் காக்கினாடா, செங்கல்பட்டு இடையிலான ரயில் சேவை புதுச்சேரி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டதோடு, புதுச்சேரி - விழுப்புரம் இடையிலான ரயில் பாதை கட்டமைப்பை மேம்படுத்தவும் மற்றும் புதுச்சேரியில் ரயில் முனையத் திட்டத்தைச் செயல்படுத்தவும் கேட்டுக் கொண்டார்.
இது பற்றி அவர் அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்: 'புதுச்சேரி மாநிலத்தின் தலைநகரை அதன் இணைப்பு பகுதியான ஏனாம் மண்டலத்தோடு இணைக்க வேண்டும் என்ற எங்களது நீண்ட நாள் கோரிக்கையை பரிசீலித்து காக்கிநாடா - செங்கல்பட்டு இடையிலான ரயில் சேவையை புதுச்சேரி வரை நீட்டித்ததற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சியைப் பாராட்டுகிறேன். ஆயினும், ரயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்து இருந்தாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதையும் உங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
3.4.2023 முதல் ரயில் சேவை தொடங்கும் என்று ரயில்வே வாரிய உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாததால் இப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், ஐதராபாத் - புதுச்சேரியை இணைக்கும் ரயில் சேவைக்கான கோரிக்கையும் வலுத்து வருவதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு ரயில் இயக்குமாறு ஏற்கெனவே கோரிக்கை வைத்திருந்தேன். அது இன்னும் ரயில்வே வாரியத்தின் பரிசீலனையில் இருக்கிறது. இதில் தாங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
புதுச்சேரி-விழுப்புரம் இடையிலான ரயில் பாதையை இரட்டிப்பு ஆக்குவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதனால் பல நன்மைகள் ஏற்படக்கூடும். நகர்ப்புற வளர்ச்சி அரசு திட்டமிடலை விடவும் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போதைய ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களை இரட்டிப்பு ஆக்க வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டிருக்கிறது. அதற்கான நிலத்தை முறைப்படுத்த வேண்டியதும் அவசியமாகிறது.
முதல் கட்டமாக, புதுச்சேரி - விழுப்புரம் இடையே உள்ள ரயில்களின் புறப்பாடு நேரத்தை 15 நிமிட இடைவெளியில் மாற்றி அமைக்க வேண்டும். இது புதுச்சேரி- விழுப்புரம் ரயில் போக்குவரத்து மற்றும் நீண்ட தூர ரயில்களின் போக்குவரத்துக்கும் வழித்தடம் ஏற்படுத்தி தர உதவும். நீண்டகால திட்டமாக இங்குள்ள கிராமங்கள், நகரங்கள், தொழிற்பேட்டைகள், கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் ஆகியவற்றை இணைக்கும்படியான நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவை திட்டத்தை பரிசீலிக்கலாம்.
தற்போது உள்ள குடியிருப்பு பகுதிகளை பாதிக்காத வகையில் ரயில் நிலையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இது, ரயில்வே வாரியத்துக்கு சொந்தமான நிலங்களை உரிய முறையில் திறம்பட பயன்படுத்துவதையும் உறுதி செய்யும். மேலும், புதுச்சேரி பகுதி மக்களுக்கும் மற்றவர்களுக்கும் வசதியாக 'டெர்மினல் கோச்சிங் வசதிகளை' புதுச்சேரியில் மேம்படுத்த வேண்டும். இந்த திட்டம் கடந்த 2008-09 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருப்பினும் அன்றைய காலகட்டத்தில் புதிய இட வசதி இல்லாத காரணத்தால் அது கிடப்பில் போடப்பட்டது.
சமீபத்திய தகவலின்படி ஏற்கெனவே இந்திய உணவு கழகம் (எஃப்சிஐ), ரயில்வே வாரியத்திடம் இருந்து குத்தகைக்கு எடுத்திருந்த ஒரு பார்சல் நிலம் மீண்டும் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ரயில் பாதையில் தெற்கு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன. ஆகவே எந்த ஒரு தடையும் இல்லாத சூழ்நிலையில் புதுச்சேரியில் டெர்மினல் கோச்சிங் வசதியை மேம்படுத்துவதற்கான திட்டத்தை செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த வசதி இப்பகுதியின் போக்குவரத்து உள்கட்டமைப்பு, உள்ளூர் பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்த ஊக்கம் அளிக்கும். இந்த பகுதியை மற்ற பகுதிகளோடு இணைப்பதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான முன்மொழிவு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கவும் வரும் நிதி ஆண்டில் அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்யவும் தங்களை கேட்டுக்கொள்கிறேன்' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT