Published : 08 Mar 2024 04:17 PM
Last Updated : 08 Mar 2024 04:17 PM
மதுரை: திமுக, அதிமுகவில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களே மதுரை தொகுதியில் களமிறங்க வாய்ப்பு உள்ள நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2024மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில், தேர்தல் களமும் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் ஆளும் பாஜக - அதிமுக இடையே கூட்டணி முறிந்ததால் அதிமுக தலைமையில் கூட்டணி உருவாகிறது. இதன்படி, பார்த்தால் திமுக, அதிமுக மற்றும் தேசிய கட்சியான பாஜக தலைமையில் என மும்முனை போட்டிக்கான களமாக மாறியுள்ளது தமிழகம்.
திமுக கூட்டணியில் ஏற்கெனவே பயணித்த கட்சிகளுடன் புதிதாக கமலஹாசனின் மக்கள் நீதி மய்யமும் கூடுதலாக சேர்ந்துள்ளது. இக்கூட்டணியில் கம்யூனிஸ்டுகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை ஓரளவுக்கு முடிந்து, ஒப்பந்தமும் முடிவாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக மட்டுமே முடிவான நிலையில், பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட பிற கட்சிகளுடன் 'சீட் ' பகிர்வு குறித்து பேசுகின்றனர்.
பாஜக தலைமையிலான கூட்டணியில் தமாகா, சரத்குமார் கட்சியான சமத்துவ மக்கள் கட்சிகளுக்கு இடையே கூட்டணி முடிவான நிலையில், பிற கட்சிகளுடன் பாஜக தொடர்ந்து பேசுகின்றனர். இந்நிலையில், திமுக கூட்டணியை பொறுத்தவரை மதுரை மக்களவைத் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கே ஒதுக்க அதிக வாய்ப்புள்ளது.
அதிமுக கூட்டணியில் தங்களது கட்சியை சேர்ந்த ஒருவரை நிறுத்த அக்கட்சி தலைமை திட்டமிட்டு, அதற்கான முதல்கட்ட வேட்பாளர் தேர்வையும் ஓரளவுக்கு முடிவு செய்திருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். ஆனாலும், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவும், மதுரை தொகுதியை குறி வைப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே இக்கட்சி நிர்வாகிகளும், விஜயகாந்த் குடும்பத்தில் இருந்து ஒருவரை மதுரையில் நிறுத்த தீர்மானமும் போட்டு, கட்சியின் தலைமைக்கு அனுப்பி உள்ளனர்.
பாஜக கூட்டணி இறுதியான பிறகே மதுரையில் யார் நிற்பது என தெரியும்போது, மும்முனை போட்டியில் மதுரை களம் சூடுபிடிக்கும். இதற்கிடையில், திமுக கூட்டணியில் மதுரையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படும் சூழல் ஏற்பட்டால் அதிமுக கூட்டணியிலும் மதுரையை கூட்டணி கட்சியான தேமுதிகவுக்கு விட்டுக்கொடுக்கலாம் என்ற தகவலும் பரவுகிறது. இது முடிவானால் விஜயகாந்த் குடும்பத்தில் இருந்து கட்டாயம் ஒருவர் நிறுத்தப்படுவார் என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதன் மூலம் இரு கூட்டணியிலும் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருவர் களம் காணும் சூழல் உருவாகும்.
இது குறித்து தேமுதிகவினர் கூறுகையில், ''திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கி, மீண்டும் சு.வெங்கடேசனும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், எங்களது கூட்டணியில் மதுரை கேட்டு பெற்று, பொதுச்செயலாளர் பிரேமலதா அல்லது அவரது மகனை நிறுத்துவோம்'' என்றனர்.
அதிமுக தரப்பில் கேட்டபோது, ''தற்போதைய நிலவரப்படி அதிமுக வேட்பாளராக டாக்டர் சரவணனை நிறுத்தலாம் என கட்சி தலைமை திட்டமிடுவதாக தெரிகிறது. மதுரையை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம் இருப்பினும், ஒருவேளை கூட்டணிக்கு விட்டுக்கொடுக்கும் சூழல் நேர்ந்தால் தேமுதிகவுக்கு மதுரை தொகுதி மாற வாய்ப்புள்ளது'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT