Published : 08 Mar 2024 03:21 PM
Last Updated : 08 Mar 2024 03:21 PM
சென்னை: "தான் எதிர்கட்சியாக இருந்தபோது சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக வீதி தோறும் போராடிய பாஜக, 9 ஆண்டு காலம் மக்கள் போராடிய போதும் செவி சாய்க்காமல் இருந்துவிட்டு தற்போது ரூ.100-குறைத்துவிட்டதாக பம்மாத்து செய்வதிலிருந்தே இது வெறும் தேர்தல் கபட நாடகம் என்பதை மக்கள் அறிவார்கள்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருடந்தோறும் மகளிர் தினம் வருகிறது. மோடிக்கு தேர்தல் நேரத்தில் மட்டும் மகளிர் பற்றி நினைவு வருகிறது. 2014-ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக சமையல் எரிவாயு விலையை ஏற்றி ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பாக்கெட்டிலிருந்து வரியாக கொள்ளையடித்த மோடி அரசாங்கம் இந்த ஆண்டு மக்களவை தேர்தல் வருவதை மனதில் கொண்டு சமையல் எரிவாயு விலையில் வெறும் ரூ.100-ஐ குறைத்துவிட்டு மகளிர் தினத்துக்காக என்று மாய்மாலம் செய்கிறது. அப்படியானால் 2014-லிருந்து நேற்றைய தினம் வரை மகளிருக்கு சுமை கூடவில்லையா?.
2014-ம் ஆண்டு இவர்கள் ஆட்சி பொறுப்பேற்றபோது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ரூ. 106 டாலராக இருந்தது. அப்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 410 மட்டுமே. ஆனால், தற்போது சர்வதேச கச்சா எண்ணெய் விலை 86 டாலராக குறைந்துள்ள நிலையில், சமையல் எரிவாயு விலையை ரூ. 1000-க்கு உயர்த்தி கொள்ளையடித்த அரசுதான் மோடி தலைமையிலான பாஜக அரசு. தற்போது ஒரு சிறு துரும்பு அளவு தேர்தல் உள்நோக்கத்தோடு குறைத்து விட்டு மகளிருக்காக செய்யும் உதவி என்று சொல்வது அப்பட்டமான மோசடியாகும்.
சமையல் எரிவாயு என்றால் அது பெண்கள் சம்பந்தப்பட்டது மட்டுமே என்று மோடி அறிவிப்பது ஆணாதிக்கதின் வெளிப்பாடாகும். பெண்களை சமையல் அறையில் கட்டிப்போடும் வர்ணாசிரமத்தை தூக்கி கொண்டாடுவதாகும். 2014-ம் ஆண்டு பெட்ரோலியப் பொருட்கள் மூலம் ரூ. 1,26,025 கோடியாக இருந்த மத்திய அரசின் வரி அதிகபட்சமாக 2021-2022ல் ரூ. 4,31,609 கோடியாக உயர்த்தப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளில் ரூ, 26,73,978 கோடி மக்களிடமிருந்து வரியாக மட்டும் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் விலையேற்றப்படும் போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இதர பல கட்சிகளும் அதை எதிர்த்தும், போராடியும் வந்துள்ளன. பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களும் போராடியுள்ளனர்.
சர்வதேச சந்தையில் உக்ரைன் போரையொட்டி பெட்ரோலியப் பொருட்களின் விலை பாதியாக குறைந்த போதும்கூட மத்திய அரசு சமையல் எரிவாயு விலையை குறைக்க முன்வரவில்லை. தான் எதிர்கட்சியாக இருந்தபோது சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக வீதி தோறும் போராடிய பாஜக, 9 ஆண்டு காலம் மக்கள் போராடிய போதும் செவி சாய்க்காமல் இருந்துவிட்டு தற்போது ரூ. 100-குறைத்துவிட்டதாக பம்மாத்து செய்வதிலிருந்தே இது வெறும் தேர்தல் கபட நாடகம் என்பதை மக்கள் அறிவார்கள்.
மக்கள் நலனில் மோடி அரசுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் கடந்த டிசம்பரில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தல் வாக்குறுதியாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நவம்பர் மாதம் சத்தீஸ்கரில் மோடியின் கேரண்டி என்று வாக்குறுதி அளித்தது போல ரூ. 500-ஆக சிலிண்டர் விலையை குறைக்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT