Published : 08 Mar 2024 02:44 PM
Last Updated : 08 Mar 2024 02:44 PM
சென்னை: “கரோனா, டெங்கு காய்ச்சல், ப்ளூ காய்ச்சல் என எத்தகைய அச்சுறுத்தல் வந்தாலும் தமிழகத்தின் பலமாக உள்ள அரசு மருத்துவர்களை, தங்கள் ஊதியத்துக்காக போராட வைப்பது என்பது அரசுக்கு அழகல்ல என்பது முதல்வருக்கு நன்றாகவே தெரியும்" என்று அரசு மருத்துவர்கள் சட்டப்போராட்டக் குழு குறிப்பிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற தீர்ப்புகளை உடனடியாக அமல்படுத்த தமிழக முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் சட்டப்போராட்டக் குழு (LCC) வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுத் தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக ஆட்சி அமைந்ததும் அரசு மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார். அதனால், மருத்துவர்கள் மிகுந்த நம்பிக்கையோடும், ஏக்கத்தோடும் காத்திருந்தோம். ஆனால், இன்னமும் கோரிக்கை நிறைவேறவில்லையே என்ற வேதனையும், வலியும் ஒவ்வொரு மருத்துவரிடத்தும் அதிகமாகவே இருக்கிறது.
நாட்டிலேயே அரசு மருத்துவர்களை தொடர்ந்து வேதனைப்பட வைக்கும் ஒரே மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்பதுதான் வருத்தமான உண்மை. கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலை தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றமே உத்தரவிட்டது. இருப்பினும் நீதிமன்றம் தீர்ப்பளித்து பல மாதங்கள் கடந்த பிறகும் அரசு கருணை காட்டவில்லை.
அதைப்போல தற்போது, அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து 6 வாரத்துக்குள் அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக அரசாணை 354-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தொற்றால் மருத்துவர்கள் உயிரிழந்த பிறகும், தங்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு என தெரிந்தும், அரசு மருத்துவர்கள் அர்ப்பணிப்போடு பணி செய்தோம். இருப்பினும் அந்த கடினமான தருணத்தில், இங்கு அரசுக்கும், மக்களுக்கும் உறுதுணையாக இருந்த அரசு மருத்துவர்களுக்கு, நாட்டிலேயே குறைவான ஊதியம் தரப்படுகிறது என்பது தான் வருத்தமான உண்மை.
அதுவும் கரோனா பேரிடரில் பணியாற்றி, உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு திமுக அரசு இதுவரையில் எதையுமே செய்யாதது எந்த வகையில் நியாயம்?. குறிப்பாக மறைந்த மருத்துவர் விவேகானந்தன் குடும்பம் தொடர்ந்து கண்ணீர் சிந்துவதை முதல்வர் ஸ்டாலின் விரும்பமாட்டார் என நம்புகிறோம்.
தமிழகத்தில் முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எத்தனையோ சாதனைகளை செய்துள்ளார். இருப்பினும் கரோனா பேரிடரில் உயிரிழப்பை குறைத்து, மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தது தான் மிகப்பெரிய சாதனை என்பது அனைவருக்கும் தெரியும்.
சமீபத்தில் ஜாக்டோ ஜியோ நண்பர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்த போது, உங்களுக்கு நான் செய்யாமல் வேறு யார் செய்யப் போகிறார் என கேட்டார். அதைப்போல தன் தந்தையின் அரசாணையை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றாமல் வேறு யார் செய்வார்கள் என்ற கேள்வி இன்று ஒவ்வொரு மருத்துவர் மனதிலும் எழுந்துள்ளது.
இது விளிம்பு நிலை மக்களுக்கான அரசு என்று முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி பெருமையாக தெரிவிக்கிறார். அப்படியிருக்க இங்கு விளிம்பு நிலை மக்கள் பெரிதும் நம்பியிருக்கும், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள், தங்கள் ஊதியத்திற்காக போராடுவதை முதல்வர் ஸ்டாலின் நிச்சயம் ஏற்றுக் கொள்ளமாட்டார் என நம்புகிறோம்.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு நிவாரணத்தொகை கிடைக்காமல் விடுபட்டோரின் வங்கிக் கணக்குகளில் தற்போது 6000 ரூபாய் நிவாரணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதுபோல இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் பெண்களுக்கும் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்" விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளதையும் பார்க்கிறோம்.
ஆனால் கரோனா, டெங்கு காய்ச்சல், ப்ளூ காய்ச்சல் என எத்தகைய அச்சுறுத்தல் வந்தாலும் தமிழகத்தின் பலமாக உள்ள அரசு மருத்துவர்களை, தங்கள் ஊதியத்திற்காக போராட வைப்பது என்பது அரசுக்கு அழகல்ல என்பது முதல்வருக்கு நன்றாகவே தெரியும். அதுவும் நாட்டிலேயே ஊதியக் கோரிக்கைக்காக மருத்துவர் ஒருவர் உயிரையே கொடுத்த பிறகும், கோரிக்கை நிறைவேறாமல் இருப்பது மிகுந்த வேதனையாக உள்ளது.
கிராமப்புற சுகாதார சேவையில் முதலிடம், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் முதலிடம், அதிக எண்ணிக்கையில் அரசு மருத்துவமனைகளில் பிரசவங்கள் நடைபெறுதல், சுகாதாரத் துறையில் தேசிய அளவில் தொடர்ந்து விருதுகள் என தமிழகத்துக்கு பெருமை சேர்த்து வரும் அரசு மருத்துவர்களை கௌரவப்படுத்துவதற்கு பதிலாக வேதனைப்பட வைப்பது என்பது மிகப்பெரிய வரலாற்று பிழையாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட, 40 ஆயிரம் ரூபாய் குறைவாக இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு ஊதியம் தரப்படுகிறது. இதிலிருந்து அரசு மருத்துவர்களுக்கு எந்த அளவுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது.
அதுவும் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு மாதத்திற்கு கூடுதலாக 25 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படுகிறது. மேலும் அரசு மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியம் என்பது பொதுமக்களின் சுகாதாரத்திற்கான முதலீடு தானே தவிர, செலவினம் அல்ல என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு கருணாநிதி பெயரில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கையான, அரசாணை 354 மட்டும் முதல்வரின் நினைவுக்கு வரவில்லை என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. அதுவும் இது முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே மருத்துவர்களிடம் நேரில் வந்து உறுதியளித்த கோரிககை என்பதை தற்போது நினைவுப்படுத்த விரும்புகிறோம்.
எனவே தற்போது நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்தும், அரசு மருத்துவர்களின் சேவையை அங்கீகரித்தும், 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு உடனே கிடைத்திட தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டுகிறோம். மேலும் டாக்டர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலைக்கான ஆணையை முதல்வரின் கைகளால் வழங்கிட வேண்டுகிறோம்.
குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வருவதற்கு முன்பாகவே அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக முதல்வரை வேண்டுகிறோம். இதன் மூலம் அரசு மருத்துவர்கள் இன்னும் உற்சாகமாக பணியாற்றிட வழிவகுப்பதோடு, சுகாதாரத் துறையை மேலும் சிறப்பாக அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்பதை நாம் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அவர் கூறியுள்ளார்..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT