Published : 08 Mar 2024 12:38 PM
Last Updated : 08 Mar 2024 12:38 PM

ஜாபர் சாதிக் விவகாரம் | முதல்வர் ஸ்டாலின் விளக்கமளிக்க இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: “ஜாபர் சாதிக் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முழு விளக்கமளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.பாரதியை வைத்து சம்பிரதாயத்துக்கு ஓர் அறிக்கையைக் கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்." என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் மகளிர் தின விழா நிகழ்ச்சிகளுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து சட்டமன்றத்தில் பேசினேன். ஆனால் திமுக அரசு இதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தமிழகம் இன்று போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக காட்சியளிக்கிறது. இது வேதனையான விஷயம். டெல்லியில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தலில் திமுகவின் ஜாபர் சாதிக் என்பவருக்கு தொடர்புள்ளது என்பது தெரியவந்துள்ளது. அவர் மீது 26 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

26 வழக்குகள் உள்ள ஒரு நபர் காவல்துறை டிஜிபியை சந்தித்து பரிசு பெறுகிறார். முதல்வரை சந்திக்கிறார், விளையாட்டுத் துறை அமைச்சர் உடன் சந்திப்பு, அமைச்சரின் மனைவியுடன் விழாவில் பங்கேற்கிறார். ஆக, இப்படி முதல்வர் குடும்பத்துடன் நெருங்கி பழகி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது வேதனையையும் வருத்தத்தையும் தருகிறது. இது கண்டிக்கத்தக்கது.

26 வழக்குகள் உள்ள நபரை எப்படி இவர்கள் சந்திக்க முடியும். இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் விசாரிக்க வேண்டும். ஜாபர் சாதிக் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முழு விளக்கமளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.பாரதியை வைத்து சம்பிரதாயத்துக்கு ஒரு அறிக்கையை கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இது உயர் போலீஸ் அதிகாரிகள், முதல்வர் குடும்பம் சம்பந்தபட்ட விஷயம். எனவே, நாட்டு மக்களுக்கு இதை பற்றி விளக்க வேண்டிய கடமை முதல்வருக்கு உள்ளது. முதல்வர் இதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளன. காவல்துறை திமுகவில் ஏவல்துறையாக மாறியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை நடக்கிறது. கஞ்சா போதையில் கொலை, கொள்ளை, பாலியல் கொடுமைகள் தமிழகத்தில் நடந்த வண்ணம் உள்ளன. இது வன்மையாக கண்டிக்கதக்கது.

மார்ச் 5ம் தேதி ராமேஸ்வரத்தில் ரூ.108 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்டுள்ளது. நாமக்கல்லில் 10000 போதை மாத்திரைகள் பிடிபட்டுள்ளது. டெல்லியில் கடத்தல் போதைப்பொருள் பிடிபட்ட பிறகு இந்த மாதத்தில் மட்டும் தமிழகத்தில் அதிகளவு இடங்களில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறியுள்ள அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இது முக்கியமான பிரச்சினை. இதில் இனியாவது முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்.

அண்மையில் நீங்கள் நலமா திட்டத்தை கொண்டு வந்தார் ஸ்டாலின். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு சொத்துவரி, மின்கட்டணம், பால் விலை என அனைத்தும் உயர்ந்துள்ளது. இத்தனை உயர்வு அளித்த பிறகும் மக்கள் எப்படி நலமாக இருக்க முடியும்.

காவல்துறை செயல்படாத காரணத்தால், செயல்படாத நிர்வாக திறனற்ற ஆட்சி இருக்கும் காரணத்தால், எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை நடக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் அதிகளவு போதைப்பொருள் பிடிபட்டுள்ளது. சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இருப்பது தமிழர்களுக்கு தலைகுனிவு ஏற்படும் செயல்.

மற்ற மாநிலங்கள் உடன் வளர்ச்சி திட்டங்களை ஒப்பிடலாம். போதைப்பொருள் விவகாரத்தை ஒப்பிட முடியுமா. மற்ற மாநிலங்கள் உடன் போதைப்பொருளை ஒப்பிட்டால் இந்த அரசு எப்படியான அரசு என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

மக்களவை தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. தேர்தல் அறிவிப்பு வருவதற்குள் கூட்டணி முழுமை அடையும்.

பாஜக வாக்குசதவீதம் தமிழகத்தில் உயர்ந்துள்ளது என்பதை மக்களிடம் போய் கேட்டால் தான் தெரியும். பாஜக கூட்டணியில் இருந்து விலகி விட்டோம் என்பதை தெளிவாக தெரிவித்துவிட்டோம்." என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x