Published : 08 Mar 2024 05:50 AM
Last Updated : 08 Mar 2024 05:50 AM

பத்மா சுப்ரமணியத்துக்கு பாராட்டு விழா; இந்தியா-ரஷ்யா நாடுகள் கலாச்சாரத்தால் ஒருங்கிணைந்துள்ளன: மூத்த விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை

பத்ம விபூஷண் விருது பெற்ற பரதநாட் டிய கலைஞர் பத்மா சுப்ரமணியத்துக்கு நடைபெற்ற பாராட் டு விழாவில் மூத்த விஞ்ஞானி ஏ.சிவதாணுப் பிள்ளை, இந்திய-ரஷ்ய தொழில் வர்த்தக சபை தலைவர் ஜெம்.ஆர்.வீரமணி ஆகியோர், அவருக்கு நினைவுப் பரிசு வழங்கினர். உடன் , ரஷ்ய தூதரக அதிகாரிகள் ஓலெக் என்.அவ்தீவ், அலெக்சாண்டர் டோடோநவ். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பத்ம விபூஷண் விருது பெற்ற பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியத்துக்கு பாராட்டு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யா அறிவியல் மற்றும் கலாச்சார மையத்தில் நேற்று நடைபெற்றது.

தென்னிந்தியாவுக்கான ரஷ்ய தூதரக அதிகாரி ஓலெக் என்.அவ்தீவ், சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் இயக்குநர் அலெக்சாண்டர் டோடோநவ், இந்திய-ரஷ்யா தொழில் வர்த்தக சபை தலைவர் ஜெம்.ஆர்.வீரமணி, பிரம்மோஸ் மையத்தின் நிறுவனரும், முத்த விஞ்ஞானியுமான ஏ.சிவதாணுப்பிள்ளை உள்ளிட்டோர் பங்கேற்று பத்மா சுப்ரமணியத்துக்கு பொன்னாடையையும், நினைவுப் பரிசாகக் கேடயத்தையும் வழங்கினர்.

பிரபல திரைப்பட இயக்குநரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் நிறுவனருமான கே.சுப்ரமணியத்தின் மகளான பத்மா சுப்ரமணியம், ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட தென்னிந்திய திரைப்பட குழுவில் ஒருவராக இருந்தவர். முன்னாள் சோவியத் ஒன்றிய குடியரசுகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் நடனமாடி இருக்கிறார்.

தனது 60 ஆண்டுக்கால நடன வாழ்க்கையில், பரதநாட்டியத்தை புதிய உயரத்திற்கு உயர்த்தியது மட்டுமல்லாமல், இந்தியாவின் வளமான பாரம்பரியத்தைப் பரப்பியதற்காகவும் பத்மா சுப்ரமணியத்துக்கு மத்திய அரசின் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

விழாவில் சிவதாணுப் பிள்ளை பேசுகையில், ``பத்ம விபூஷன் விருதுபெற்ற பத்மா சுப்ரமணியத்துக்கு எனது வாழ்த்துகள். இந்தியா ரஷ்யா நாடுகளுக்கும் இடையே வலுவான நட்புறவு தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. அதேபோல ரஷ்ய நண்பர்களைச் சந்திக்கும்போது, அதிகம் பேசப்படுவது நம் நாட்டின் கலாச்சாரம்தான்.

அந்த வகையில் இந்த 2 நாடுகளும் கலாச்சாரத்தால் ஒருங்கிணைந்து உள்ளன. இவ்வாறாக இரு நாடுகளுக்குமான கலாச்சார உறவில் பத்மா சுப்ரமணியத்தின் குடும்பத்தாரின் பங்களிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது'' என்றார்.

இந்திய-ரஷ்யா தொழில் வர்த்தக சபை தலைவர் ஜெம்.ஆர்.வீரமணி பேசுகையில், ``உலகம் முழுவதும் கலைக்கு எனத் தனி மரியாதை உள்ளது. அந்த வகையில் பரதநாட்டிய கலையில் பல்வேறு சாதனைகள் படைத்த பத்மா சுப்ரமணியத்துக்கு இந்திய அரசின் சார்பில் பத்ம விபூஷண் வழங்கப்பட்டிருப்பது மிகச் சரியானது'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x