Published : 07 Mar 2024 08:33 PM
Last Updated : 07 Mar 2024 08:33 PM
புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் உயிரிழப்புக்கு நீதி கோரியும், இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலக வேண்டியும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், பந்த் போராட்டத்துக்கு ஆதரவு கோரியும் இண்டியா கூட்டணி சார்பில் வியாழக்கிழமை மாலை புதுச்சேரியில் அமைதி பேரணி நடைபெற்றது.
புதுச்சேரி அண்ணா சிலை அருகில் தொடங்கிய பேரணி அண்ணா சாலை, நேரு வீதி வழியாக மிஷின் சென்று வீதி சந்திப்பில் நிறைவடைந்தது. அங்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியது: “புதுச்சேரி மாநில சரித்திரத்தில் நடக்காத சம்பவம் கடந்த 2-ம் தேதி நடந்திருக்கிறது. விளையாடி கொண்டிருந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டுள்ளார். இது குலை நடுங்குகின்ற சம்பவமாக உள்ளது. புதுச்சேரி மக்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும் சம்பவம் இது. நாங்கள் நடத்துவது அரசியல் நோக்கம் கொண்ட போராட்டம் இல்லை. மக்களுடைய போராட்டம்.
மக்கள் கொதித்து எழுந்து என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசை எதிர்த்து தெருவில் இறங்கி போராடுகிறார்கள். இந்தச் சம்பவத்தில் மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டிய கடமை, பொறப்பு இண்டியா கூட்டணிக்கு உண்டு.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்றார்கள். ஆனால் சாராய ஆலைதான் ஓடுகிறது. முதல்வரிடம் ரூ.40 லட்சம் கொடுத்தால் உடனே ரெஸ்டோ பார்கள் திறக்க அனுமதி கொடுக்கப்பார். எந்த விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் ரெஸ்டோ பார்களை திறந்து இளம் பிள்ளைகளை சீரழிக்கும் வேலையை என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசு செய்து வருகிறது.
புதுச்சேரி கொலை நகரமாகி வருகிறது. ரவுடிகள் அதிகரித்துவிட்டார்கள். மக்கள், வியாபாரிகள், தொழிற்சாலைகளை மிரட்டி மாமூல் கேட்டுகிறார்கள் என்றோம். ஆனால், இவர்கள் செவிசாய்க்கவில்லை. இதற்கு காரணம், முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சர் அலுவகத்தில் ரவுடிகள் இருக்கிறார்கள். ரவுடிகளின் உறைவிடமாக பாஜக வந்துவிட்டது. ரவுடிகள் பாஜகவில் இணைந்தால் புனிதமாகி விடுவார்கள்.
பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று தாய்மார்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு இண்டியா கூட்டணி நம்பிக்கை ஊட்ட வேண்டும். குஜராத்தில் இருந்து ஹெராயின், பிரவுன் சுகர், கஞ்சா கொண்டுவரப்பட்டு, எல்லா மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு பாஜகதான் பின்னணி. தனிப்படை போட்டு கஞ்சாவை தடுக்க வேண்டும் என்றோம். இதை கேட்கவில்லை. இதனால் புதுச்சேரி மாநிலத்தில் இளைஞர்கள், மாணவர்கள் கஞ்சாவை போட்டுக் கொண்டு கொலை செய்கிறார்கள். கொல்லை அடிக்கிறார்கள்.
மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு கும்மாளம் போடும் இடமாக ரெஸ்டோ பார்கள் உள்ளன. இப்படிப்பட்ட அசாதாரண சூழ்நிலையை முதல்வர் ரங்கசாமியும், உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் ஏற்படுத்தியுள்ளார்கள்.
மேற்கு வங்கத்தில் நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்காக மம்தா பானர்ஜியை கண்டித்து புதுச்சேரி பாஜக மகளிர் அணி போராட்டம் நடத்தியது. புதுச்சேரியில் சிறுமி படுகொலைக்கு ஏன் பாஜக போராட்டம் செய்யவில்லை. இவர்களை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துள்ளது. பந்த் போராட்டத்துக்கு மக்கள் முழு ஆதரவு கொடுக்க வேண்டும்” என்றார்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, எதிர்க்கட்சி தலைவர் சிவா, காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன், திமுக எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், திமுக அவை தலைவர் எஸ்.பி.சிவக்குமார், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, விசுவநாதன், இளைஞரணி தலைவர் ஆனந்தபாபு, சிபிஐ செயலாளர் சலீம், சிபிஎம் செயலாளர் ராஜாங்கம், விசிக முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT