Published : 07 Mar 2024 08:24 PM
Last Updated : 07 Mar 2024 08:24 PM

“விமர்சனம் என்ற போர்வையில் உதயநிதி எல்லை மீறி பேசுகிறார்” - ஆர்.பி.உதயகுமார்

மதுரை: “விமர்சனம் என்ற போர்வையில் எல்லை மீறி பேசுகிறார் உதயநிதி ஸ்டாலின்” என சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஜெயலலிதா 76-வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், “தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே நீங்கள் நலமா என்று முதல்வர் கேட்கிறார். மனிதநேயம் உள்ள, மனசாட்சி உள்ள மனிதராக இருப்பவர்கள், வறமையில் வாடும் மக்களிடம் நீங்கள் நலமா என்று கேட்பார்களா? அவர்கள் எப்படி நலம் என்று சொல்லுவார்கள்.

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னனாக தமிழகத்தில் இருக்கிற ஜாபருக்கு நீங்கள் பதவி கொடுத்து உள்ளீர்கள். உள்துறையை கையில் வைத்து இருக்கிற முதல்வர் இதுவரை மக்களுக்கு எந்த விளக்கம் சொல்லவில்லை. தமிழகத்திலேயே கெட்டுப்போன சட்டம் - ஒழுங்கை காப்பாற்றவில்லை. போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்துவில்லை. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் தாராளமாக நடக்கிறது.

அரசின் அதிகார மையப்புள்ளியாக இருக்கிற உதயநிதி ஸ்டாலினை உச்ச நீதிமன்றம் இன்றைக்கு கண்டித்து இருக்கிறது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி மத சுதந்திரத்தை பற்றி பேசி உள்ளீர்கள், இந்திய அரசியல் அமைப்பு சட்டங்களை, சுதந்திரத்தை மீறி இருக்கிறீர்கள், பேச்சுரிமையிலே மீறி இருக்கிறீர்கள் என்று நீதிபதிகள் கண்டித்துள்ளனர். ஒரு பொறுப்புள்ளவர் இப்படி செயல்படலாமா என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த பிறகும், அவர் எப்படி அமைச்சர் பதவியில் நீடிப்பது நியாயமா? அவர் விமர்சனம் என்ற போர்வையில் எல்லை மீறி பேசுகிறார்” என்றார்.

இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை வகித்தார். அன்னதானத்தினை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் மகேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.தமிழரசன், கே.மாணிக்கம், மாவட்ட பொருளாளர் திருப்பதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x