Published : 07 Mar 2024 05:08 PM
Last Updated : 07 Mar 2024 05:08 PM
திருச்சி: திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகளிடையே போட்டி எழுந்து நிலையில், இந்தத் தொகுதியை கேட்டுப் பெற மதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே, இதுவரை அமைதியாக இருந்த திமுகவும் களத்தில் குதித்துள்ளதால் யாருக்கு இந்த தொகுதி என்பதில் ‘சஸ்பென்ஸ்’ ஏற்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் திருச்சி மக்களவைத் தொகுதியை தங்களுக்கு மீண்டும் ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியும், இந்த முறை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என மதிமுகவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஒருவேளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கினால் சிட்டிங் எம்.பி திருநாவுக்கரசர் அல்லது மறைந்த முன்னாள் எம்.பி அடைக்கலராஜ் மகனும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ஜோசப் லூயிஸ் ஆகியோர் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூறியது: திருச்சி தொகுதி எம்.பி திருநாவுக்கரசருக்கு இந்த முறை வாய்ப்பு கிடைப்பது கடினம் தான். ஏனெனில் அவருக்கு தொகுதியில் சற்று அதிருப்தி உள்ளது. அவரது மகனும் எம்எல்ஏவாக உள்ளார். ஒரே குடும்பத்தில் 2 பேர் பதவி வகிக்கின்றனர்.
மேலும், அவரது தலையீட்டால் நிர்வாகிகள் பலர் மாற்றப்பட்டதால், கட்சியிலும் கடும் புகைச்சலை கிளப்பி உள்ளது. இதனால் அவர்கள், திருநாவுக்கரசருக்கு சீட் தரக்கூடாது, இந்த முறை மண்ணின் மைந்தரான ஜோசப் லூயிஸுக்கு தரவேண்டும் என கச்சை கட்டி வருகின்றனர்.
ஆனால் திருநாவுக்கரசர் தனக்கே சீட் தரவேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கிறார். இது கட்சித் தலைமைக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது என்றனர். மேலும், கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ போட்டியிடுவதற்காக இந்தத் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என மதிமுகவும் மல்லுக்கட்டி வருகிறது.
ஆனால், இதுவரை தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலையில், இன்று நடைபெறும் மதிமுக நிர்வாகக் குழு அவசர கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதனிடையே, காங்கிரஸ், மதிமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் வேண்டாம், தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என திமுகவிலும் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இங்கு முன்னாள் எம்எல்ஏவான கே.என்.சேகரன் தன் பங்குக்கு சீட் கேட்டு வருவதாகவும், அவருக்காக ஆதரவாக அமைச்சர் அன்பில் மகேஸ் காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக, பாஜகவில் யார்? - அதிமுகவைப் பொறுத்தவரை, புதுக்கோட்டை மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளரான கருப்பையா வேட்பாளராக களம் இறக்கப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. இதுகுறித்து அதிமுகவினர் கூறியது: புதுக்கோட்டை மணல் ஒப்பந்ததாரர் கரிகாலனின் சகோதரரான கருப்பையா, தாராளமாக செலவு செய்வார் என்பதால் கட்சித் தலைமை அவரை களமிறக்க திட்டமிட்டுள்ளது.
புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை பகுதிகளில் கோயில்நிகழ்ச்சிகள், ஜல்லிக்கட்டு, கபடி போன்றவற்றுக்கு நிறைய செலவு செய்துள்ளார். அப்பகுதியில் செல்வாக்கானவர் என்றனர்.
பாஜகவில் மாவட்ட துணைத் தலைவர் ஜெயகர்ணாவுக்கு சீட் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை பாஜக கூட்டணியில் அமமுக சேர்ந்தால் அக்கட்சியினர் அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான் அல்லது மாநகர் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் போட்டியிடலாம் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT