Published : 07 Mar 2024 05:55 PM
Last Updated : 07 Mar 2024 05:55 PM
தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி மீண்டும் போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில், அவரை எதிர்த்து அதிமுக மற்றும் பாஜக சார்பில் போட்டியிடப் போவது யார் என்ற கேள்வி தொகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி இதுவரை மூன்று தேர்தல்களை மட்டுமே சந்தித்துள்ளது. முதல் முறை 2009-ல் நடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.ஜெயதுரை, 2014-ல் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றது. இதற்கு காரணம், திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரியுமான கனிமொழி , அதிமுக-பாஜக கூட்டணியில் அப்போதைய தமிழக பாஜக தலைவரும், தற்போதைய தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் போட்டியிட்டதே ஆகும். நாடு முழுவதும் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட இந்த தொகுதியில் முதல் முறையாக தேர்தல் களத்தை சந்தித்த கனிமொழி 3,42,209 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மீண்டும் போட்டி: இந்நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட கனிமொழி விருப்ப மனு அளித்துள்ளார். இதனால் திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை திமுகவினர் ஏற்கெனவே தொடங்கிவிட்டனர்.
மாவட்டம் முழுவதும் முதல்கட்ட பிரச்சார கூட்டங்களை நடத்தி முடித்து, சமூக வலைதளங்கள் மூலம் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்படாத திட்டங்கள், 3 ஆண்டு கால திமுக அரசின் சாதனைகள் என பட்டியலிட்டு துண்டு பிரசுரங்களை வீடு வீடாக விநியோகம் செய்து வருகின்றனர்.
களம் காணும் பாஜக: எதிர்தரப்பில் தூத்துக்குடி தொகுதியில் இம்முறையும் பாஜக களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக, இம்முறை தனி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா தூத்துக்குடியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இவர் ஏற்கெனவே தூத்துக்குடி மாநகராட்சி மேயர், மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர். மேலும், பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாநில ஓபிசி அணி துணைத் தலைவர் விவேகம் ரமேஷ் ஆகியோரது பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
சரத்குமார் போட்டியா? - பாஜகவில் தூத்துக்குடி தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கினால், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவர் திருநெல்வேலி மக்களவை தொகுதியை கேட்பதாக தெரிகிறது.
திருநெல்வேலி தொகுதியில் பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதால், சரத்குமாருக்கு தூத்துக்குடியை ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக: அதிமுக சார்பில் போட்டியிட அக்கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதனின் மகளான பெருங்குளம் பேரூராட்சி தலைவர் புவனேஸ்வரி, சென்னையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி எஸ்.ஆர்.வேலுமணி, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் எம்.பி ஜெயசிங், தியாகராஜ் நட்டர்ஜி, வழக்கறிஞர்கள் பிரபு, ஆண்ட்ரூ மணி உள்ளிட்ட சிலர் சீட் கேட்டுள்ளனர்.
தற்போதைய நிலையில் தென் சென்னை மாவட்ட அதிமுகவில் தி.நகர் பகுதி செயலாளராக இருக்கும் எஸ்.ஆர்.வேலுமணியின் பெயர் முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் முன்னாள் திமுக எம்பி எஸ்.ஆர்.ஜெயதுரையின் தம்பியும், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகநாதனின் உறவினரும் ஆவார்.
கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பிறகே, தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து களம் காண போகிறவர் யார் என்ற கேள்விக்கு தெளிவான விடை கிடைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT