Published : 07 Mar 2024 01:09 PM
Last Updated : 07 Mar 2024 01:09 PM

ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன் அதிமுகவில் ஐக்கியம்

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகளும், ஆர்.கே.நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருமான சிம்லா முத்துச்சோழன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்.

சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். அதிமுகவில் இணைந்தது குறித்து பேசிய சிம்லா முத்துச்சோழன், "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு எனக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியளித்தார். ஆனால், உறுதியளித்தபடி நடந்துகொள்ளவில்லை. நான் பலமுறை அவருக்கு ஞாபகப்படுத்த முயன்றும் பலனில்லை.

சமீபத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நான் எடுத்த முயற்சிகளுக்கும் திமுக தலைமை தடை போட்டது. இவ்வாறு திமுகவில் எனது வளர்ச்சியில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் அதிமுகவில் சேர்வது என்ற முடிவை எடுத்தேன். மிகவும் மனது உடைந்த நிலையில் தான் இந்த முடிவை எடுத்தேன். தற்போதையை திமுகவில் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கீகாரம் கொடுக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

யார் இந்த சிம்லா முத்துச்சோழன்?: திமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் இரண்டாவது மருமகள் சிம்லா முத்துச்சோழன் (35). கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாகக் கொண்ட இவர், பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். இவரது இயற்பெயர் ஆண்டனி சிம்லா ஷினி. ஆர்சி கிறிஸ்தவ பிரிவைச் சேர்ந்தவர். இவரது தாத்தா, புனித அந்தோணியார் என்ற திரைப்படத்தை தயாரித்து, அதன்மூலம் போப் ஆண்டவரிடம் ஆசி பெற்றவர்.

முதல்வர் ஜெயலலிதா படித்த அதே சர்ச்பார்க் கான்வென்டில் படித்த சிம்லா, பிபிஏ., எல்எல்பி., முடித்து தற்போது சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். அவரது கணவர் முத்துச்சோழனும் வழக்கறிஞர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். வழக்கறிஞர் தொழில் செய்து வரும் சிம்லா, கிட்டத்தட்ட 20 வருடங்களாக திமுகவில் பணியாற்றி வந்தார். முதலில் வடசென்னை மகளிர் வழக்கறிஞர் அணியில் அமைப்பாளராக இருந்தார். பின்னர் மாநில மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளராக பொறுப்பு வகித்தார். அப்போது தான், 2016 சட்டசபை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் களமிறக்கப்பட்டார் சிம்லா முத்துச்சோழன்.

அந்த தேர்தலில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். எனினும், ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டதால், சிம்லா முத்துச்சோழன் தமிழகம் முழுவதும் அறியப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பின் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கறிஞராக இருந்த மருதுகணேஷுக்கு திமுக வாய்ப்பளித்தது. இவர் டிடிவி தினகரனிடம் டெபாசிட் இழந்தார்.

அடுத்தடுத்த தேர்தல்களில் சிம்லா முத்து சோழனுக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படாத நிலையில், கட்சி பணியில் இருந்து விலகி இருந்து தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x