Published : 07 Mar 2024 11:38 AM
Last Updated : 07 Mar 2024 11:38 AM
சென்னை: சர்வதேச மகளிர் தினம் நாளை (மார்ச்.8) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பெண்களுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி: உழைக்கும் பெண்களின் உரிமைகளை உறுதி செய்வதும், அனைத்துப் பணிகளிலும், அனைத்து நிலைகளிலும் பாலினச் சமத்துவத்தை உறுதி செய்வதும்தான் சர்வதேச மகளிர் நாள் கொண்டாட்டங்களுக்கு அர்த்தமாகும். 'ஆணுக்கு இங்கு பெண் இளைத்தவறில்லை' என்கிற வாக்கியத்தை நிரூபிக்கின்ற வகையில், அவ்வையார், காரைக்கால் அம்மையார், 'கவிக்குயில்' சரோஜினி நாயுடு, அன்னை தெரேசா, முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி, இந்திராகாந்தி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஃபாத்திமா பீவி போன்ற எத்தனையோ பெரும் ஆளுமைகள் இன்னமும் இந்த சமூகத்திற்கு பெரும் ஊக்க சக்திகளாகவும், ஏனைய பெண்களுக்கு ஆகச்சிறந்த கிரியா ஊக்கிகளாகவும் இருந்து வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அத்தகைய பெண் ஆளுமைகள் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும்கூட சிறந்த முன்மாதிரிகளாகவே விளங்கி இருக்கிறார்கள். 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி வாகைசூடி, 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளும் கட்சியே மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆளுகின்ற கட்சியாக மாற்றியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இந்தச் சாதனையை எம்ஜிஆருக்குப் பிறகு ஜெயலலிதாதான் படைத்தார்.
பெண்மையைப் போற்றி வணங்கவும், பெண்கள் இன்றி இந்த உலகம் இல்லை என்பதை உணர்த்தவும், பெண்களின் தியாக வாழ்வுக்கு வணக்கம் செலுத்தவும், ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் நாள் "சர்வதேச மகளிர் தினமாக" கொண்டாடப்படுகிறது. பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் இந்த நாளில் பெண்கள் அனைவருக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது இதயமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் பெண்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கான தனி இட ஒதுக்கீடு வழங்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரின் பொற்கால ஆட்சியில், பெண்கள் வாழ்வு மேம்பட எண்ணற்ற திட்டங்களைக் கொண்டுவந்து வெற்றிகரமாக செயல்படுத்தினார்.
அன்புமணி ராமதாஸ்: உலகின் தவிர்க்க முடியாத சக்தியான மகளிரைப் போற்றும் உலக மகளிர் தினம் நாளை கொண்டாடப் படவுள்ள நிலையில், உலகெங்கும் வாழும் மகளிருக்கு உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் எங்குமே பெண்கள் பலவீனமானவர்கள் என்ற பொய்யான நம்பிக்கை நிலவி வருகிறது. ஆண்களைவிட பெண்களுக்குத் தான் போர்க்குணம் அதிகம். ஆண்கள் வென்று விட்டதாக பெருமிதப்பட்டுக் கொண்டாலும், அவர்களின் வெற்றிக்கு பின்னணியில் இருப்பது பெண்கள் தான். சங்க காலத்திலிருந்து நிகழ்காலம் வரை இதற்கு ஏராளமான நாயகியரை உதாரணமாகக் கூற முடியும்.
உலகிலேயே மகளிருக்கு மிக அதிக மரியாதை வழங்கும் சமுதாயம் தமிழ்ச் சமுதாயம். பெண்களை கடவுளுக்கும் மேலாக வைத்து வழிபடும் சமுதாயமும் தமிழ்ச் சமுதாயம் தான். மனித நாகரிகங்கள் வளரக் காரணமாகவும், வாழ்வாதாரம் மற்றும் பாசன ஆதாரமாகவும் திகழும் நதிகளுக்குக் கூட பெண்களின் பெயரை சூட்டியதிலிருந்தே மகளிரை தமிழ் சமுதாயம் எந்த அளவுக்கு மதித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். நடைமுறை வாழ்விலும் அதே மரியாதை வழங்கப்பட வேண்டும்.
மனித வாழ்வில் பெருமை பேசப்படாத கதாநாயகர்கள் பெண்கள் தான். அவர்கள் கொண்டாடப்படவும், போற்றப்படவும், கவுரவிக்கப்படவும், முன்னோடியாக மதிக்கப்படவும் ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அவற்றை நாம் அங்கீகரிக்கவில்லை என்பது தான் எவராலும் மறுக்க முடியாத உண்மை. அந்த நிலை மாற்றப்பட வேண்டும். பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அனைத்துத் துறைகளிலும் சாதிப்பார்கள்.
பெண்களை ஆண்களுக்கு அடுத்தப்படியாக வைத்துப் பார்க்கும் மனநிலை விலக வேண்டும். நாட்டையும், வீட்டையும் தலைமையேற்று நடத்தும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டால், அனைத்துத் துறைகளிலும் சாதனைகளை படைத்ததைப் போன்றே இதிலும் சாதிப்பார்கள். எனவே, வீட்டையும், நாட்டையும் மகளிரே வழிநடத்தும் உன்னத சூழலை உருவாக்குவதற்காக கடுமையாக உழைக்க மகளிர் நாளான இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ராமதாஸ்: உலகின் ஆக்கும் சக்தியாகவும், காக்கும் சக்தியாகவும் திகழும் மகளிரை பெருமைப்படுத்தும் வகையில் உலக மகளிர் நாள் மார்ச் 8 ஆம் தேதியான நாளை கொண்டாடப்படும் நிலையில், அனைத்து மகளிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உளமார்ந்த மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகளிர் நாள் நூற்றாண்டுகளைக் கடந்த வரலாறு கொண்டதாகும். 1789 ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சியின்போது சமத்துவம், சுதந்திரத்துவம், வாக்குரிமை ஆகிய மூன்றையும் வலியுறுத்தி பாரிஸ் நகரில் பெண்கள் போராடத் தொடங்கியது தான் மகளிர் நாள் கொண்டாடப்படுவதற்கான தொடக்கம் ஆகும். அதன் பின் உலகம் முழுவதும் உள்ள மகளிர் தங்களின் கோரிக்கைக்காக குரல் கொடுத்த நிலையில் 1911 ஆம் ஆண்டில் தான் சர்வதேச மகளிர் நாளை ஐ.நா. அமைப்பு முறைப்படி அறிவித்தது.
ஒரு காலத்தில் உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலையில் இருந்த பெண்களுக்கு இப்போது ஓரளவு உரிமைகளும், விடுதலையும் கிடைத்திருந்தாலும் கூட இன்னும் பாதுகாப்பு கிடைக்கவில்லை. 21ஆம் நூற்றாண்டு பிறந்து, கால் நூற்றாண்டாகியும் பெண்களால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்பதற்கு புதுவையில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு தான் வலி மிகுந்த எடுத்துக்காட்டு.
ஆணுக்கு இணையாக பெண்கள் முன்னேற வேண்டும்; சாதனைகளை படைக்க வேண்டும் என்பன தான் நமது உயர்ந்த நோக்கங்கள். அந்த நோக்கங்கள் எட்டப்பட வேண்டும் என்றால் அவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எனவே, உலகம் முழுவதும், குறிப்பாக தமிழ்நாட்டில் பெண்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் பாதுகாப்பாக நடமாட வேண்டும்; அதற்கான சூழலை உருவாக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க உலக மகளிர் நாளான இந்த நன்நாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்.
டிடிவி தினகரன்: பெண்கள் பெற்ற உரிமைகளை பேணிக்காக்கவும், பெற வேண்டிய உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டிய இன்றைய சமுதாயத்திலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களும் வன்கொடுமைகளும் தொடர்கதையாகி வருவது வேதனையளிக்கிறது.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோர் வகுத்துக் கொடுத்த சமதர்ம கொள்கையின் படி பெண்களின் முன்னேற்றமே நாட்டின் வளர்ச்சி என்பதை உணர்ந்து, பாலின சமத்துவம், அரசியல், பொருளாதாரம், சமூக வாழ்க்கையில் மகளிர் விரும்பும் மாற்றத்தை கொண்டு வர இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT