Published : 07 Mar 2024 09:47 AM
Last Updated : 07 Mar 2024 09:47 AM

அதிமுகவுடன்தான் கூட்டணி - அறிவித்தது தேமுதிக

அதிமுகவில் மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி உள்ளிட்டோர் இடம்பெற்ற குழு சில தினங்களுக்கு முன்பு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.

இதனிடையே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிகவில் குழு அமைத்து பிரேமலதா நேற்று உத்தரவிட்டிருந்தார். அதில், கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், அவைத் தலைவர் வி.இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், துணைச் செயலாளர் ப.பார்த்தசாரதி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் வி.இளங்கோவன், அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், ப.பார்த்தசாரதி ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவை சேர்ந்த கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, பா.பென்ஜமின் ஆகியோரை நேற்று சந்தித்து 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் 1 மணி நேரம்நடைபெற்ற பேச்சுவார்த்தையில், விருதுநகர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 4 தொகுதிகளை தேமுதிகவினர் கேட்டதாகவும், அது குறித்து பழனிசாமியிடம் கலந்தாலோசித்து சொல்வதாக அதிமுகவினர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையின் முடிவில், தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவன்செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக அடுத்தடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும். இப்போதும், எதிர்காலத்திலும் தேமுதிக கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என்றார்.

2011 சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை தேமுதிக பெற்றது. அதன் பிறகு எந்த தேர்தலிலும் அக்கட்சியின் வேட்பாளர்கள் வெற்றிபெறவில்லை. விரைவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை இழக்க உள்ளது. அதை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் தேமுதிக உள்ளது. அதனால் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் மும்முரமாக இருப்பதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x