Published : 07 Mar 2024 05:15 AM
Last Updated : 07 Mar 2024 05:15 AM
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. ஆ.ராசா ஆகியோர் சனாதன தர்மத்தை எய்ட்ஸ், கரோனா, மலேரியாவுடன் ஒப்பிட்டு பேசியது இந்துத்துவம் பற்றிய புரிதல் இல்லாததையே காட்டுகிறது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் கடந்த 2023 செப்டம்பர் 2-ம் தேதி நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய இளைஞர் நலன்,விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘‘கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்க முடியாது. ஒழிக்கத்தான் வேண்டும். அப்படித்தான்சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்யவேண்டிய முதல் வேலை’’ என்று பேசினார்.
இதேபோல திமுக எம்.பி. ஆ.ராசாவும் சனாதன தர்மத்தை எய்ட்ஸுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். இந்த கூட்டத்தில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் கலந்து கொண்டார். உதயநிதி, ஆ.ராசா இவ்வாறு பேசியதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்தது.
இந்நிலையில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் எம்.பி ஆ.ராசா ஆகியோர் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார்கள் என்று விளக்கம் கேட்டும், அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் இந்துமுன்னணி நிர்வாகிகள் மனோகர், கிஷோர்குமார், ஜெயக்குமார் ஆகியோர் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ-வாரன்டோ வழக்குகள் தொடரப்பட்டன.
நீதிபதி அனிதா சுமந்த் முன்புஇந்த வழக்குகள் மீதான விசாரணை நடந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் டி.வி.ராமானுஜம், ஜி.ராஜகோபாலன், ஜி.கார்த்திகேயனும், எதிர் மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன், என்.ஜோதி, ஆர்.விடுதலை மற்றும் முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரமும் வாதிட்டனர்.
இந்நிலையில், நீதிபதி அனிதா சுமந்த் நேற்று தீர்ப்பளித்தார். அதில் கூறியிருப்பதாவது: இந்த வழக்குகள் விசாரணைக்கு உகந்தவை என்றாலும், சனாதன தர்மம் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சுக்காக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, திமுக எம்.பி. ஆ.ராசா ஆகியோர் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கின்றனர் என்று விளக்கம் அளிக்க கோரும் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க இயலாது.
அதேநேரம், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கொள்கைரீதியாக பல வேறுபாடுகள், மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். அந்த கருத்துகள் எந்தவொரு மதநம்பிக்கைக்கும் அழிவையோ, இழிவையோ ஏற்படுத்துவதாக இருக்க கூடாது. அமைச்சர்கள், எம்.பி.க்கள் பொறுப்பு உணர்ந்துஆக்கப்பூர்வ கருத்துகளையே தெரிவிக்க வேண்டும்.
வரலாற்று ரீதியாக உண்மைத்தன்மையை துல்லியமாக ஆராய்ந்து, விவரங்களின் அடிப்படையில் பேச வேண்டும். எந்த கொள்கையை கடைபிடித்தாலும் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையிலேயே கருத்துகளை கூற வேண்டும். கருத்து சுதந்திரம்வரம்பை தாண்ட கூடாது.
சனாதன தர்மத்துக்கு எதிரானகூட்டத்தில் அறநிலையத் துறைஅமைச்சரே பங்கேற்றது ஏற்புடையது அல்ல. அதேபோல சனாதன தர்மத்தை எய்ட்ஸ், கரோனா, மலேரியாவுடன் ஒப்பிட்டு பேசியதுஇந்துத்துவம் பற்றிய புரிதல் இல்லாததையே காட்டுகிறது.
எனினும், குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டால் மட்டுமே அரசியலமைப்பு, மக்கள் பிரதிநிதித்துவ சட்ட ரீதியாக மக்கள் பிரதிநிதிகளை தகுதி இழப்பு செய்ய முடியும்.
சனாதன தர்மத்துக்கு எதிராகபேசிய அமைச்சர் உதயநிதிக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருந்தாலும், அதில் எந்த வித தண்டனையும் விதிக்கப்படாத நிலையில் முன்கூட்டியே தாக்கல்செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகளின் மூலமாக, அவர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கின்றனர் என்று விளக்கம்அளிக்க உத்தரவிட முடியாது. இவ்வாறு தீர்ப்பளித்து, வழக்குகளை நீதிபதி முடித்துவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT