Published : 07 Mar 2024 05:23 AM
Last Updated : 07 Mar 2024 05:23 AM

இயற்கை சீற்றங்களின்போது மீட்பு பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களை அழைத்து கவுரவிக்கலாம்: ஆளுநர் ஆர்.என்.ரவி யோசனை

சென்னை: “இயற்கை சீற்றங்களின் போது தங்கள் உயிரை பணயம் வைத்து மீட்பு பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களை பொது விழாக்களில் அழைத்து கவுரவிக்கலாம்” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

மிக்ஜம் புயலின் போது சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் ஆகியவற்றில் சிக்கி தவித்த பொதுமக்களை ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை பணயமாக வைத்து பத்திரமாக மீட்டனர்.

இந்த மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு பாராட்டு விழா சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், தக் ஷிணபாரத ராணுவ தலைமை அதிகாரி கரன்பீர் சிங் பிரார், வெள்ள பாதிப்பின் போது ராணுவ வீரர்களின் சவாலான மீட்பு பணிகள் குறித்து எடுத்துரைத்தார். பின்னர், மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள், வீரர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்து பேசியதாவது:

எப்போது எல்லாம் இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படுகிறதோ, அப்போது தேசம் இந்திய ராணுவத்தின் மீது நம்பிக்கை கொள்கிறது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தின் போதும், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கன மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போதும் பெருவாரியான மக்கள் கடும் துன்பத்துக்கு ஆளாயினர்.

பத்திரமாக மீட்டனர்: பெரு வெள்ளத்தின் போது உணவு, தண்ணீர், மின்சாரம் இல்லாமல், நாள் கணக்கில் பொதுமக்கள், குழந்தைகள் வீடுகளுக்குள் முடங்கி இருந்தனர். யாருமே செல்ல முடியாத இடத்துக்குக் கூட ராணுவ வீரர்கள் சென்று ஏராளமானோரை பத்திரமாக மீட்டனர். அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கினர்.

பொது விழாக்களின் போது அரசியல்வாதிகளை அழைத்து கவுரவிக்கிறார்கள். உண்மையிலேயே உயிரை பணயம் வைத்து பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றும் ராணுவ வீரர்களை பொது விழாக்களில் அழைத்து கவுரவிக்கலாம்.எதிர்காலங்களில் இதுபோன்ற புயல்,வெள்ளம் அடிக்கடி வரும் என்றும், இதை விட அதிக பாதிப்புகளை அது ஏற்படுத்தக் கூடும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு காலநிலை மாற்றம் மிக முக்கியக் காரணம்.

காலநிலை மாற்றத்துக்கான காரணத்தை கண்டறிந்து அதற்கு தகுந்தாற்போல் நாம் செயல்பட வேண்டும். எப்போதும் ராணுவ வீரர்கள் தேசத்துக்காக சேவையாற்ற தயாராக உள்ளனர். இவ்வாறு ஆளுநர் ரவி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x