Published : 31 Aug 2014 11:09 AM
Last Updated : 31 Aug 2014 11:09 AM
கரும்புக்கு அரசு அறிவித்த ஆதார விலையை ஆலைகள் வழங்காததால், மாநிலம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கரும்பிலிருந்து எத்தனால் உற்பத்திக்கு அரசு அனுமதித்து, அதை கொள்முதல் செய்தால், விவசாயிகளுக்கு உரிய விலையையும், நிலுவைத் தொகையையும் கொடுக்க முடியும் என்கின்றனர் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர்.
தமிழக சர்க்கரை ஆலைகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் கரும்புக்கு, டன்னுக்கு 2,650 ரூபாய் வழங்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. ஆறு மாதமாகியும் இந்த உத்தரவை ஆலைகள் அமல்படுத்தாமல், விலையை குறைத்து வழங்கி வருகின்றன. இதோடு, கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் நிலுவைத் தொகையை, சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் வழங்காமல் இழுத்தடித்து வருகின்றன. இந்த இரு பிரச்சினைகளையும் முன்னிருத்தி மாநிலம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிற நாடுகளில் இருந்து குறைந்த விலையில் சர்க்கரை இறக்குமதி நடப்பது மற்றும் உள்நாட்டில் தேவைக்கதிகமான உற்பத்தி போன்ற காரணங்களால் சர்க்கரைக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரையை விற்க முடியாமல் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கரும்பிலிருந்து எத்தனால் எரிபொருளை உற்பத்தி செய்ய அனுமதியளித்து, அவற்றை அரசே நியாயமான விலைக்கு கொள்முதல் செய்தால் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கின்றனர் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள்.
செலவு மிச்சமாகும்
இது குறித்து ஈரோடு மாவட்டம் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனசபை தலைவர் சுபி.தளபதி கூறியதாவது:
2013-ம் ஆண்டு சர்க்கரை ஆலைகளில் 5 சதவீத எத்தனால் உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கு நியாயமான விலை நிர்ணயிக்கப்படாததால், ஆலைகள் எத்தனாலை உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் டீசல் விலை உயர்வால் ஆண்டுக்கு போக்குவரத்துக்கழகங்களுக்கு ரூ.300 கோடி செலவாகிறது என அரசு கூறுகிறது. டீசல் விலை ஒரு ரூபாய் ஏறினால், அரசுக்கு 15 கோடி ரூபாய் கூடுதல் செலவாகிறது. இந்த நிலையில், டீசலுடன் 50 சதவீத எத்தனாலை கலந்து பயன்படுத்தினால், பெரும் தொகை அரசுக்கு மிச்சமாகும். சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முழுவதும் எத்தனால் எரிபொருள் மூலம் இயங்கும் பேருந்தை மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்தில் தொடக்கிவைத்தார். எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படும் பெரும் தொகையை குறைக்கும் வகையில், நாடு முழுவதும் எத்தனால் மூலம் இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
இதை பின்பற்றி சோதனை அடிப்படையிலாவது எத்தனால் மூலம் இயங்கும் பேருந்துகளை தமிழக அரசு அறிமுகப்படுத்த வேண்டும். மற்ற திட்டங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் தமிழக அரசு, எத்தனால் பயன்பாட்டை ஊக்குவித்து தங்கள் கண்ணீர் துடைக்க வேண்டுமென்பது கரும்பு விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
மதுபான உற்பத்திக்கு முன்னுரிமை!
சர்க்கரை உற்பத்தியின்போது கிடைக்கும் மொலாசிஸ், மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு வழங்கப்படுகிறது. எத்தனால் உற்பத்தி செய்தால், மதுபானம் தயாரிக்க தேவையான மொலாசிஸ் பற்றாக்குறை ஏற்படும். கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் சர்க்கரை ஆலைகள் இல்லை. ஆனால், அங்கு மதுபான உற்பத்தி ஆலைகள் இயங்குகின்றன. அவர்களுக்கு தேவையான மொலாசிஸ் இங்கிருந்து செல்கிறது. பல்லாயிரம் கோடிகள் புழங்கும் மதுபான ஆலைகளின், ‘லாபி’யும் எத்தனால் உற்பத்தியை தடுக்கிறது என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT