Last Updated : 06 Mar, 2024 07:45 PM

 

Published : 06 Mar 2024 07:45 PM
Last Updated : 06 Mar 2024 07:45 PM

புதுச்சேரி சிறுமிக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

புதுச்சேரி: புதுச்சேரியில் கடத்தி கொல்லப்பட்ட சிறுமிக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வியாழக்கிழமை காலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.

புதுச்சேரி சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கொலை செய்யப்பட்டு வாய்க்காலில் சடலமாக வீசப்பட்டார். அவரது உடலை கைப்பற்றிய முத்தியால்பேட்டை போலீஸார் ஜிப்மர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து அவரது பெற்றோரிடம் உடலை ஒப்படைத்தனர்.

இதையடுத்து, சிறுமியின் உடலை வாகனம் மூலம் வீட்டுக்கு கொண்டு வந்தனர். இன்று மாலை அவரது வீட்டு வாசல் முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் பிரமுகர்கள், இளைஞர்கள், பெண்கள், கல்லூரி மாணவ, மாணவியர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சிறுமியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஏராளமானோர் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.

சிறுமி பயன்படுத்திய பள்ளி புத்தகங்கள், நோட்டுகள், பைகள், விளையாட்டுப் பொருள்களை வைத்து அதற்கு விளக்கேற்றி உறவினர்கள் துக்கத்தில் இருந்தனர்.

சிறுமியின் உடல் நாளை காலை 11 மணிக்கு வைத்திக்குப்பம் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படும் என்று பெற்றோர் தெரிவித்தனர்.

முன்னதாக, “புதுச்சேரி - முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கில் பெண் எஸ்.பி தலைமையில் விசாரணை நடத்தப்படும். வேகமாக சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைத்து ஒரு வாரத்துக்குள் நீதி கிடைக்க வழி செய்வேன்” என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். | விரிவாக வாசிக்க > “ஒரு வாரத்துக்குள் நீதி கிடைக்க நடவடிக்கை” - புதுச்சேரி சிறுமிக்கு அஞ்சலி செலுத்திய ஆளுநர் தமிழிசை உறுதி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x