Published : 06 Mar 2024 05:51 PM
Last Updated : 06 Mar 2024 05:51 PM
புதுச்சேரி: பிரெஞ்சு ஒப்பந்தப்படி புதுச்சேரியை பூர்விகமாகக் கொண்டு இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று ஆவணங்களுடன் சமூக நீதிப் பேரவை நிர்வாகிகள் இன்று தேர்தல் அதிகாரிகளிடம் மனு தந்துள்ளனர். இது பாஜகவுக்கு சிக்கலா என கேள்வி எழுந்துள்ளது.
புதுவை தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், ஆட்சியர் குலோத்துங்கன் ஆகியோரிடம் சமூக நீதி பேரவையின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான விசுவநாதன், தலைவர் தன்ராமன், செயலாளர் கீதநாதன், செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், 'புதுச்சேரியில் தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்திய குடியுரிமைச் சட்டம், புதுவை குடியுரிமை ஆணை ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்துத் தகுதிகளும் உள்ளடக்கப்பட்டு இருக்க வேண்டும்.
1962-க்கு முன்பாக பூர்விக குடியிருப்பு மக்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதவர்கள் புதுவை தேர்தலில் போட்டியிட முடியாது என்ற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய சட்ட விதிகள் கொடுக்கப்பட்டது.
பிரெஞ்சு இந்திய ஒப்பந்த ஷரத்துகள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் தேர்தலில் நிற்பதற்கு தகுதியற்றவராக ஆகிவிடுவார்கள்’ என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், அனைத்து அதிகாரிகளுடன் விவாதித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்
பாஜகவுக்கு சிக்கல்? - புதுச்சேரியில் பாஜகவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், பாஜக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கொண்ட பட்டியலை வேட்பாளர் தேர்வுக்காக அனுப்பியுள்ள நிலையில், புதுச்சேரியை பூர்விகமாக இல்லாதோர் தேர்தலில் போட்டியிட இயலாது என்று மனு தந்துள்ளது பாஜகவுக்கு சிக்கலாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT