Published : 06 Mar 2024 05:39 PM
Last Updated : 06 Mar 2024 05:39 PM

“எஸ்பிஐ மூலம் தேர்தல் ஆதாயம் தேடுகிறது பாஜக” - முத்தரசன் காட்டம்

இரா.முத்தரசன் | கோப்புப் படம்

சென்னை: “பாஜகவின் தேர்தல் ஆதாயத்துக்கு எஸ்பிஐ கால அவகாசம் கேட்கிறது. எனவே, உச்ச நீதிமன்றம் அதை ஏற்கக்கூடாது” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பாஜக ஒன்றிய அரசு 2017-18-ஆம் நிதியாண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் திட்டத்தை அறிவித்தது. இந்தத் தேர்தல் பத்திரப் பரிமாற்றத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி முகமையாக நியமிக்கப்பட்டது.

நாடாளுமன்ற ஜனநாயக கட்டமைப்பில் தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாக அமைவதும், வாக்குப்பதிவு அச்சமின்றி, நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, தேர்தல் பத்திர திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஜனநாயக கட்டமைப்பை சிதைத்து வரும் பாஜக ஒன்றிய அரசு தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரும் ஆதாயம் அடைந்திருக்கிறது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அமர்வு நீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்பதை உறுதி செய்து, தேர்தல் பத்திரங்கள் செல்லாது என்பதுடன், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்களும் செல்லாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

2019 முதல் இதுவரை மாற்றியுள்ள தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விபரங்களை - பத்திரங்கள் வாங்கியது யார்? அந்தப் பத்திரங்களை பெற்று, பணமாக மாற்றிக் கொண்டவர்கள் யார்? எந்த நிறுவனம் மற்றும் அரசியல் கட்சிகள் - என முழு விபரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திற்கு ஒப்படைக்க வேண்டும்.

அந்த விபரங்களை தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பு மார்ச் 13ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தின் இணைய வலை தளத்தில் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் 14.02.2024-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் எஸ்பிஐ தேர்தல் பத்திர விபரங்களை சேகரிக்க ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் தேவை என உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

எஸ்பிஐயின் நடவடிக்கை உச்ச நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் முற்றிலும் தவறான செயலாகும். பாஜக ஒன்றிய அரசு பாரத ஸ்டேட் வங்கியை பலியிட்டு அரசியல் ஆதாயம் தேடும் மிக மலிவான செயலில் ஈடுபடுவது பொதுத்துறை நிறுவனத்தை அழிக்கும் பேரபாயமானது. ஊர் தோறும் ஊழலுக்கு எதிராக வாயில் நுரை தள்ள முழங்கி வரும் பிரதமர் மோடியின் முகத்திரை கிழிபடாமல் பாதுகாக்கும் முயற்சிக்கு பாரத ஸ்டேட் வங்கி நிர்பந்திக்கப்பட்டிருக்கிறது.

முன்னர் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போதும் மீட்கப்பட்ட கள்ளப் பணம் எவ்வளவு? கறுப்புப் பணம் எவ்வளவு என கேள்வி எழுந்த போது, எண்ணி முடிக்க கால அவகாசம் கேட்டதையும், இறுதியில் பணமதிப்பிழப்பு பயனற்ற நடவடிக்கையாகவும், பொருளாதார சிக்கலுக்கு வழிவகுத்து தோல்வியில் முடிந்து விட்டதை நாடு மறக்கவில்லை.

இந்த நிலையில் தேர்தல் பத்திரங்கள் விபரங்கள் தருவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உறுதியான நிலை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x