Published : 06 Mar 2024 04:28 PM
Last Updated : 06 Mar 2024 04:28 PM
சென்னை: "பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் இந்தியாவில் பெரும் தொழிலதிபர்கள் தவிர வேறு எந்த ஒரு தரப்பினரும் நிம்மதியாக இல்லை. உழவர்கள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், மாணவர்கள், சிறுபான்மையினர், பட்டியலின மக்கள் எனப் பல தரப்பினரும் எதிர்கொள்கின்ற சிக்கல்களே இண்டியா கூட்டணிக்குச் சாதகமானதாக அமையும். யார் பிரதமராக வரவேண்டும் என்பதைவிட, மீண்டும் யார் வந்துவிடக் கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அது தேர்தல் முடிவுகளில் தெரியும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆங்கில இதழ் ஒன்றுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டியில் இருந்து...
நீங்களும் உங்கள் திமுகவும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் மையமாக இருக்கிறீர்கள். எத்தகைய சவால்கள் உங்கள் முன் உள்ளன? இண்டியா கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேறியது உங்கள் வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமா?
“இண்டியா கூட்டணியின் தொடக்க கூட்டத்திலேயே அந்தந்த மாநிலங்களில் வலிமையுள்ள கட்சிகளைக் கருத்தில்கொண்டு தொகுதிப் பங்கீட்டினை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். நிதிஷ் குமார் சொந்தக் காரணங்களைக் கருதி வெளியேறினாலும் அவருடைய பிஹார் மாநிலத்தில் இண்டியா கூட்டணி வலுவாக இருப்பதுடன், அங்கே தொகுதிப் பங்கீடும் சுமுகமான முறையில் நடந்து வருகிறது.
அதுபோலவே வாய்ப்புள்ள இடங்களில் தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் தங்களுக்குரிய பங்களிப்புடன் செயல்படுகின்றன. தேர்தல் களம் என்று வருகிறபோது ஒரு சில சவால்கள் எல்லாத் தரப்புக்கும் இருக்கும். மக்கள் மனங்களை வெல்வதில் இண்டியா கூட்டணிக்கு எந்தச் சவாலும் இல்லை.”
அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போன்ற விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து...
“சுதந்திரமான விசாரணை அமைப்புகளை மத்திய பாஜக அரசு தன் கைப்பாவையாகப் பயன்படுத்துகிறது என்பதை எதிர்க்கட்சிகளான நாங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. மக்களே அதைச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். பாஜக ஆட்சியல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுங்கட்சியினர் மீதுதான் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகியவை பாய்கின்றன.
பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள ஊழல் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஏற்கெனவே ஊழல் புகாருக்கு ஆளான எதிர்க்கட்சி பிரமுகர் திடீரென பாஜக பக்கம் சென்றுவிட்டால் உடனே அவரை புனிதராக்கி, அமைச்சர் பதவி கொடுக்கும் அளவுக்குக் கறை நீக்கக்கூடிய ‘அற்புத வாஷிங் மிஷின்’ பாஜகவிடம் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொண்டு விட்டார்கள்.
தேர்தல் நெருங்க நெருங்க பாஜக அல்லாத கட்சியினர் மீதான பாய்ச்சல்கள் இன்னும் கூடுதலாக இருக்கும். அதனை எதிர்கொள்வதற்கான வலிமை இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உண்டு. பாஜகவை முழுமையாக அம்பலப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அது அமையும்.”
2024 தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெற உதவும் காரணிகளாக எவை இருக்கும்? தோற்கடிக்க முடியாத கட்சி என பாஜக தங்களைப் பற்றி முன்னெடுத்து வரும் பரப்புரை 2004-இல் இந்தியா ஒளிர்கிறது என அவர்கள் கூறியதை நினைவுபடுத்துகிறதே. மோடியை வெல்வது உண்மையில் சாத்தியமா?
“ஜனநாயக நாட்டில் யாரும் நிரந்தரமாக முடிசூட்டிக் கொள்ள முடியாது. 2004-இல் ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க நினைத்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் அதற்கு எதிர்மறையாக அமைந்தன.
பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் இந்தியாவில் பெரும் தொழிலதிபர்கள் தவிர வேறு எந்த ஒரு தரப்பினரும் நிம்மதியாக இல்லை. உழவர்கள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், மாணவர்கள், சிறுபான்மையினர், பட்டியலின மக்கள் எனப் பல தரப்பினரும் எதிர்கொள்கின்ற சிக்கல்களே இண்டியா கூட்டணிக்குச் சாதகமானதாக அமையும். யார் பிரதமராக வரவேண்டும் என்பதைவிட, மீண்டும் யார் வந்துவிடக் கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அது தேர்தல் முடிவுகளில் தெரியும்.”
பாஜக மீது நீங்கள் தொடர்ந்து வைக்கும் குற்றச்சாட்டுகளாலும் அவர்களுக்கு எதிராகத் தேசிய அளவில் நீங்கள் கூட்டணியைக் கட்டமைப்பதாலும்தான் மத்திய அரசு உங்களைக் குறிவைக்கிறது எனக் கருதுகிறீர்களா?
“எதிர்ப்புகளோ தாக்குதல்களோ எனக்கோ திமுகவுக்கோ புதிதல்ல. எப்போதெல்லாம் ஜனநாயகத்துக்கு ஆபத்து நேர்கிறதோ அப்போது எதிர்ப்புக் குரல் கொடுக்கும் இயக்கங்களில் முதன்மையானது திமுக. ஆதரித்தாலும் - எதிர்த்தாலும் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர் மறைந்த முதல்வர் கருணாநிதி என்று சொன்னவர் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி. நான் கருணாநிதியின் மகன். ஆதரிக்க வேண்டிய நல்லவற்றை ஆதரிப்பதிலும் உறுதியாக இருப்பேன். எதிர்க்க வேண்டிய தீமைகளை எதிர்ப்பதிலும் உறுதியாக இருப்பேன்."
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT