Published : 06 Mar 2024 04:10 PM
Last Updated : 06 Mar 2024 04:10 PM
கோவில்பட்டி: கோவில்பட்டியில் அரசு அலுவலக வளாக சாலை சீரமைக்காததைக் கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டியில் உள்ள அரசு அலுவலக வளாகத்தில் வேலை நாட்களில் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் முதல் அரசின் கடை நிலை ஊழியர்கள் வரையிலும், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், டி.எஸ்.பி., காவல் ஆய்வாளர்கள், காவலர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் என தினமும் சுமார் 5 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். ஆனால், இங்குள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இது தொடர்பாக கடந்த ஓராண்டுக்கு மேலாக தமாகா சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்கு மட்டும் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு அலுவலக வளாகத்தில் உள்ள சாலையை கண்டுகொள்ளப்படாமல் அப்படியே உள்ளது. இதனை கண்டித்தும், சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப் படாததை கண்டித்தும் தமாகா சார்பில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூதன போராட்டம் நடந்தது.
நகர தலைவர் கே.பி.ராஜ கோபால் தலைமை வகித்தார். வட்டார தலைவர் கே.பி.ஆழ்வார்சாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.ஏ.கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கோட்டாட்சியர் அலுவலக நுழைவாயில் ஆர்ச்சில் தங்களது மனுக்களை தோரணமாக கட்டி, அதற்கு பூமாலைகளை அணிவித்து, சூடம் ஏற்றி, அரசு அலுவலக வளாக சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து கோஷமிட்டனர்.
இந்தப் போராட்டத்தில், நகர பொருளாளர் ஜி.செண்பகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.திருமுருகன், நகர செயலாளர் வி.எஸ்.சுப்பு ராஜ், நகர துணை தலைவர்கள் வி.மணிமாறன், டி.சரவணன், வட்டார துணை தலைவர் கே.செந்தூர் பாண்டி, மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் வி.பொன்ராஜ் மற்றும் தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT