Published : 06 Mar 2024 03:46 PM
Last Updated : 06 Mar 2024 03:46 PM
சென்னை: கோவை ஈஷா யோகா மையத்தின் கழிவுநீர், அருகில் உள்ள விவசாய நிலங்களில் வெளியேற்றப்படவில்லை என்பதை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவை செம்மேடு கிராமத்தை சேர்ந்த சிவஞானம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “கோவை ஈஷா மையத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல் விழாக்கள் நடத்த தடை விதிக்க வேண்டும்.
கோவை இக்கரை, பூலுவாம்பட்டியில் உள்ள ஈஷா மையத்துக்கு அருகில் எனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் செய்து வருகிறேன். 195 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஈஷா மையத்தில் 5000-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். குறிப்பாக சிவராத்திரி போன்ற விழா காலங்களில் லட்சக்கணக்கான நபர்கள் அங்கு திரள்கின்றனர்.
ஈஷா யோகா மையத்திலிருந்து சுத்திகரிக்கப்படாமல், கழிவு நீரை அருகில் உள்ள விவசாய நிலங்களில் விடுவதால் கால்நடைகளும், அப்பகுதியில் வசிக்கும் மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், நிலத்தடி நீர் மாசடைகிறது.
எனவே, கழிவு நீரை வெளியேற்றுவதற்கு முறையான வசதிகளை செய்யும் வரை ஈஷா யோகா மையத்தில் விழாக்கள் நடத்துவதற்கும், பக்தர்கள் கூடுவதற்கும் அனுமதிக்கக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “விழா நடக்கும் நாட்களில் லட்சக்கணக்கான நபர்கள் அங்கு வருகின்றனர். இதனால், அப்பகுதி கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறது.
சிவராத்திரி நாட்களில் ஒலி, ஒளி மாசு காரணமாக யானைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், கழிவுநீரை தங்கள் நிலத்துக்கு விடுவதை தடை செய்ய வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இது தொடர்பாக மாசுகட்டுப்பாடு வாரியம் ஆய்வு செய்ததா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஈஷா யோகா மையத்தில் இருந்து கழிவுநீர் அருகில் உள்ள நிலங்களில் வெளியேற்றப்படவில்லை என்பதை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்ய உத்தரவிட்டனர். மேலும், இந்த மனுவுக்கு ஈஷா யோகா மையமும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT