Published : 06 Mar 2024 02:15 PM
Last Updated : 06 Mar 2024 02:15 PM
பழநி: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக, ‘உங்கள் தொகுதியில் வேட்பாளராக யார் போட்டியிடலாம்’ என தொகுதி வாரியாக தனித்தனியாக நிர்வாகிகளிடம் 3 பெயர்கள் எழுதி வாங்கப்பட்டுள்ளன.
வரும் ஏப்ரலில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை என தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
இதற்காக, மக்களவைத் தொகுதி வாரியாக மாவட்டத் தலைவர், செயலாளர் உட்பட அனைத்துப் பிரிவு நிர்வாகிகளையும், பாஜக மேலிடத்தில் இருந்து தனித் தனியாக போனில் அழைத்து, உங்கள் தொகுதி வேட்பாளராக யார் போட்டியிடலாம் என்று கருத்துக் கேட்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகம் முழுவதும் 39 மக்களவைத் தொகுதியிலும் பாஜக சார்பில் வேட்பாளர் தேர்வுக்கான கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. அதில் மாநில நிர்வாகிகள் முன்னிலையில், மாவட்ட அளவிலான நிர்வாகிகளிடம் விண்ணப்பப் படிவத்தை கொடுத்து, அதில் உங்கள் தொகுதியில் யார் போட்டியிடலாம், ஏன் ஏதற்காக, தற்போது அவர் வகிக்கும் பதவி உள்ளிட்ட விவரங்களுடன், நீங்கள் விரும்பும் 3 வேட்பாளர்களின் பெயர்களை குறிப்பிடும்படி எழுதி வாங்கப்பட்டுள்ளது.
இது தவிர, அந்த விண்ணப்பத்தை எவரும் பார்த்திராத வகையில், ‘வேட்பாளர் தேர்வு பெட்டி’யில் அந்த விண்ணப்பங்களை போட்டு, மாநில நிர்வாகிகள் சென்னைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு மேலிட நிர்வாகிகளின் ஆலோசனைக்குப் பிறகு, வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, விரைவில் தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் இன்று டெல்லி செல்கிறோம். பாஜக தேசிய தலைவர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து தமிழகத்தின் 39 தொகுதிகளில் யார் போட்டியிடுவது என்ற பட்டியலை வழங்கி அது குறித்து ஆலோசிக்க உள்ளோம்" பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதன் விவரம்: ''வேட்பாளர் பட்டியலுடன் டெல்லி செல்கிறோம்'' - அண்ணாமலை பேட்டி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT