Last Updated : 28 Feb, 2018 09:08 AM

 

Published : 28 Feb 2018 09:08 AM
Last Updated : 28 Feb 2018 09:08 AM

தமிழகத்தில் அடுத்த வாரம் திறக்கப்பட உள்ள 17 மணல் குவாரிகளில் 150 கண்காணிப்பு கேமராக்கள்: உயர் நீதிமன்ற உத்தரவு எதிரொலி

தமிழகம் முழுவதும் அடுத்த வாரம் புதிதாக திறக்கப்பட உள்ள 17 மணல் குவாரிகளில் 150 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறினர்.

தமிழகத்தில் நீண்டகாலமாக ஆற்று மணலுக்கு தட்டுப்பாடு உள்ளது. இதனால் அதிக விலை கொடுத்து வாங்க நேரிடுகிறது. மணல் குவாரிகள் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததை அடுத்து, புதிய மணல் குவாரிகள் திறப்பதில் அரசு மும்முரமாக உள்ளது. இந்த நிலையில், மணல் குவாரி வழக்கு ஒன்றை விசாரித்த உயர் நீதிமன்றம், விதிமுறைகளை மீறி செயல்படும் மணல் குவாரிகளை மூட உத்தரவிட்டதுடன், கடும் நிபந்தனைகளுடன் புதிய மணல் குவாரிகளைத் திறக்கவும் அனுமதி அளித்தது. இதையடுத்து, புதிய மணல் குவாரிகளைத் திறப்பதுடன், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் நடவடிக்கையும் வேகமெடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில மணல் லாரி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் கூறியதாவது:

மணல் குவாரிகளை டெண்டர் எடுத்தவர்கள் ஆளுங்கட்சியினருக்கு நெருக்கமாக இருப்பதால் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த முடியவில்லை. தற்போது செயல்படும் 7 குவாரிகளில் ஒரு குவாரியில்கூட கண்காணிப்பு கேமரா இல்லை. நீதிமன்ற உத்தரவுப்படி, மணல் குவாரிகளில் கண்காணிப்பு கேமராக்கள், ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய லாரிகளுக்கு மட்டும் மணல் சப்ளை, மணல் சேமிப்பு கிடங்கில் எடை மேடை ஆகியவை கட்டாயமாக்கப்பட்டால், ஆற்றில் அதிகமாக மண் அள்ளுவது, ரசீது போடாமல் மணல் எடுத்துச் செல் வது தடுக்கப்படும். பாதுகாப்பு கருதி, சொந்த செலவில் 10 ஆயிரம் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தியுள்ளோம். தேசிய பர்மிட் லாரிகளுக்கு மணல் கிடையாது என்று உத்தரவிட்டால் பாதிக்கு மேல் கடத்தலைத் தடுக்கலாம். தமிழகத்தில் பதிவு செய்துள்ள 1 லட்சம் லாரிகளில் மணல் லாரிகள் எண்ணிக்கை மட்டும் 55 ஆயிரம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு மணல் லாரிகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.முனிரத்தினம் கூறும்போது, “தமிழகத்தில் தற்போது செயல்படும் 11 மணல் குவாரிகளில், கடலூர் மாவட்டத்தில் கள்ளிப்பாடி, வேலூர் மாவட்டத்தில் பொய்கை, சக்கரமல்லூர், தஞ்சை மாவட்டத்தில் வடரங்கம் ஆகிய இடங்களில் உள்ள குவாரிகளில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. குவாரிகளில் திறந்தவெளியில் கேமராக்கள் பொருத்தப்படுவதால் மழை, வெயிலால் மட்டுமல்லாது, லாரி போக்குவரத்தாலும் சேதமடைகின்றன” என்றார்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தற்போது 14 மணல் குவாரிகள் இயங்குகின்றன. அவற்றில் இருந்து தினமும் 2,800 லாரி லோடு மணல் கிடைக்கிறது. குவாரிகளில் இருந்து சராசரியாக 250 முதல் 300 லோடு வரை கிடைக்கிறது. இந்த குவாரிகளில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. சேதமடைந்துள்ள கேமராக்களை சரிசெய்யவும், தேவைப்பட்டால் புதிய கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். குவாரிகளின் நில அமைப்பு (செவ்வகம், வளைவு), அதன் பரப்பளவு, அணுகு சாலையின் தூரம் ஆகியவற்றுக்கு ஏற்ப கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை மாறுபடும்.

வேலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர் மாவட்டங்களில் புதி தாக 17 குவாரிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் செயல்பட உள்ள இந்த புதிய குவாரிகளில் சுமார் 150 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட லாரிகளுக்கு மட்டுமே மணல் வழங்குவதால், அதன் போக்குவரத்தை சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்தே கண்காணிக்கிறோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x