Last Updated : 06 Mar, 2024 12:51 PM

 

Published : 06 Mar 2024 12:51 PM
Last Updated : 06 Mar 2024 12:51 PM

சிறுமி கொலையில் மவுனம் காக்கும் புதுச்சேரி அரசு: வைத்திலிங்கம் சாடல்

வைத்திலிங்கம் | கோப்புப் படம்

புதுச்சேரி: போதைப் பொருள்களைத் தடுக்க ஓரிரு நாட்களில் புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவிட்டால் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைந்து முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என புதுவை காங்கிரஸ் அறிவித்துள்ளது. மேலும், சிறுமி கடத்தப்பட்டு கொலையான சம்பவத்தில் அரசு மவுனம் காப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டியுள்ளது.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும் மக்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: "புதுச்சேரி முத்தியால் பேட்டையில் சிறுமி மாயமாகி நான்கு நாட்களுக்குப் பிறகு அவரது இறந்த உடல் கிடைத்துள்ளது. அதில் குற்றம் சாட்டப்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர். குற்றப் பின்னணியை பார்ப்பது அவசியம். போதைப் பொருள் பயன்படுத்தியோர் இச்சம்பவத்தை செய்துள்ளனர். இதன் மூல காரணம் போதைப் பொருள். கடந்த சில தினங்களாக போதைப் பொருள் அதிகரிப்பு பற்றி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசியல் தலைவர்களும் அறிக்கை தந்துள்ளனர். போதைப் பொருள் நடமாட்டம் அதிகளவில் கல்வி நிலையங்களில் குறிப்பாக கல்லூரிகள், பள்ளிகளில் இருக்கிறது. ஆட்சியர் கூட்டத்திலும் இக்கருத்து பதிவாகியுள்ளது. போதைப் பொருள்களை தடுக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு எதுவுமே செய்யவில்லை. காவல்துறை அமைச்சர் நமச்சிவாயம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பெரிய இச்சம்பவம் நடந்துள்ளது. பெண் குழந்தைகள் பெற்றோர் பயந்துள்ள சூழல் உள்ளது. கதவை மூடி வீட்டினுள் இருக்கும் சூழல் இருக்கிறது. ஆண் குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர் போதையில் அடிமையாகி விடுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

ஸ்டாம்ப், லிக்விட், சாக்லேட் என பல விதங்களில் போதைப் பொருள்கள் நடமாட்டம் சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் பலரும் இதை பயன்படுத்ததான் புதுச்சேரி வருகிறார்கள் என்பது வேதனை தருகிறது. வெள்ளி முதல் ஞாயிறு வரை பொதுமக்கள் நடமாட்டம் செய்வதே கடினமாகி புதுச்சேரி மக்களுக்கு சொல்ல முடியாத பய உணர்வு வந்துள்ளது. ஆனால், மக்கள் பயத்தை போக்க முதல்வர் ரங்கசாமி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறுமி காணாமல் போனதிலிருந்தும், கொலை நடந்தது தொடர்பாகவும் முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் கவலைப்படாமல் நிம்மதியாக உள்ளது இங்கு வசிக்கும் மக்களுக்கு பயத்தை தருகிறது.

போதைப் பொருள்களைத் தடுக்க முதல்வர் ரங்கசாமி போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைத்து பெரிய போராட்டத்தையோ, முழு அடைப்பு போராட்டத்தையோ நடத்துவோம். அரசும், அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வேதனை தருகிறது. ஓரிரு நாட்களில் போதைப் பொருள்களை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய முழு அடைப்பு போராட்டத்தை நடத்துவோம்.

போதைப் பொருள்களில் இருந்து மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும். போதைப் பொருள்களைத் தடுக்க அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட வேண்டும். அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு போதைப் பொருட்கள் எங்கு இருக்கின்றன என்பது தெரியும். காவல் துறை, வருவாய்த் துறை, கல்வித் துறை உட்பட முக்கிய துறைகளை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்.

முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலர்கள், அதிகாரிகள் இணைந்து குழு அமைத்து அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து இதை செய்ய வேண்டும். புதுச்சேரி போதை நகரமாக இருக்கிறது. மக்களவைத் தேர்தல் கூட்டணியைப் பொருத்தவரை அகில இந்திய தலைமை பேசுகிறது. புதுச்சேரி தரப்பிடமும் அவர்கள் தான் கலந்து பேசுவார்கள். தலைமை முடிவு எடுக்கும். புதுச்சேரியில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது. இன்னும் மூன்று நாட்களுக்குள் இண்டியா கூட்டணியில் போட்டியிடுவோர் விவரம் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்தார். பேட்டியின் போது எம்எல்ஏ வைத்திய நாதன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x