Published : 06 Mar 2024 10:59 AM
Last Updated : 06 Mar 2024 10:59 AM

வெற்றிவாய்ப்பின் அடிப்படையில் அதிமுகவுடன் கூட்டணி: கிருஷ்ணசாமி விளக்கம்

சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிவாய்ப்பின் அடிப்படையிலேயே அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உறுதிபட தெரிவித்தார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தல் களம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், புதிய தமிழகம் கட்சி எந்த கூட்டணியில் இடம்பெறும் என்ற பல்வேறு கருத்துகள் கூறப்பட்டு வந்த நிலையில், அக்கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.

இதையொட்டி அதிமுக தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்று அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தை 30 நிமிடங்கள் நீடித்தது. இதுகுறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நமக்கு அளித்த சிறப்பு நேர்காணல்:

நீங்கள் பாஜக கூட்டணிக்கு செல்வீர்கள் என்று பேசப்பட்ட வந்த நிலையில் திடீரென அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை சந்தித்தது ஏன்? - “அதிமுக பொதுச் செயலாளரை அதிகாரப்பூர்வமற்ற முறையில்தான் சந்தித்தேன். இரு கட்சிகளுக்கிடையே இணக்கமான சூழல் ஏற்பட வேண்டும் என்பதைத் தவிர அந்த சந்திப்பில் வேறு நோக்கமோ, முக்கியத்துவமோ இல்லை.”

அதிமுகவுடன் கூட்டணி வைக்க விசேஷ காரணம் உண்டா? - “கடந்த ஒரு மாதமாக தேசிய, மாநில அரசியலில் கள நிலவரம் குறித்து பொதுமக்கள், கட்சியினர், நடுநிலையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோருடன் தீவிர ஆலோசனை நடத்தினோம். கூட்டணி இயற்கையாகவும், கொள்கை, உணர்வு அடிப்படையிலும் இருக்க வேண்டும். வெற்றிக் கூட்டணியாகவும் இருப்பது அவசியம். அந்த அடிப்படையில்தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது என முடிவு செய்தோம்.”

அதிமுகவுடன் கூட்டணி உறுதியாகிவிட்டதா? - “அதிமுக – புதிய தமிழகம் கூட்டணி உறுதியாகிவிட்டது. இதில் எந்த மாற்றமும் இருக்காது. இரு தரப்பினரும் விரும்பி எடுத்த முடிவு என்பதால் கூட்டணியை ஆணித்தரமாகச் சொல்கிறேன்.”

எத்தனை தொகுதிகள் கேட்கிறீர்கள்? - “இரு கட்சிகளுக்கிடையே இன்று (மார்ச் 5) அதிகாரப்பூர்வமான முதல்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இத்தேர்தலில் நாங்கள் இணக்கமாகவும் இணைந்தும் பணியாற்றுவது குறித்து பேசினோம். எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றி பேசவில்லை.

அடுத்தடுத்த சுற்று பேச்சுக்களின் போதுதான் தொகுதிகள் முடிவாகும். தென்காசி நாடாளுமன்றத் தொகுதி உள்ளிட்ட சில தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்.” இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x