Published : 06 Mar 2024 11:00 AM
Last Updated : 06 Mar 2024 11:00 AM
2024 மக்களவைத் தேர்தலுக்கு, தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் சின்னம் பெற அள்ளாடி வருகின்றன. குறிப்பாக நாம் தமிழர், மதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை நீதிமன்றப் படிகளையும் ஏறியுள்ளன. ஏன் இந்த தள்ளாட்டம்? - இதோ ஒரு தெளிவுப் பார்வை.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டும்தான் நிரந்தர சின்னம் ஒதுக்கப்படும். தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக, திமுக, பாஜக, சிபிஐ, சிபிஎம், தேமுதிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக உள்ளன.
பாமக, மதிமுக, விசிக, அமமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி என பெரும்பாலான கட்சிகள் அங்கீகாரம் பெறுவதற்கான தகுதியடையாமல் உள்ளன.
அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கு பொதுச் சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கும். அதில் தங்களுக்கு என்ன சின்னம் ஒதுக்க வேண்டும் என்னும் கோரிக்கையை கட்சிகள் முன்வைக்கலாம். அதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் உள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் ஒரே சின்னத்தைக் கோரினால் முன்னுரிமை அடிப்படையில் சின்னத்தை ஒதுக்குகிறது தேர்தல் ஆணையம்.
நாம் தமிழர் கட்சி தங்களுக்கு ஒதுக்கப்படிருந்த கரும்பு விவசாயி சின்னத்தை குறிப்பிட்ட கால அவகாசத்தில் மீண்டும் கோராத்தால் அந்தச் சின்னத்தை இழந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கட்சி இதே சின்னத்தைக் கேட்டதால் முன்னுரிமை அடிப்படையில் அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சின்னத்தை இழந்திருப்பது நாம் தமிழர் கட்சிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் பல ஆண்டுகளாக இயங்குகின்ற கட்சிகளாக இருந்தும், அந்தக் கட்சிகளால் ஏன் அங்கீகாரம் பெற முடியவில்லை? ஒரு கட்சி அங்கீகாரம் பெற வேண்டுமெனில், அது தன் வாக்கு வங்கியை உயர்த்திக்காட்ட வேண்டும்.
சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் கட்சிகள் பெறும் வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்து அந்தந்தக் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். குறிப்பாக தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை பெற 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் கட்சியை நடத்த வேண்டும். அல்லது மக்களவையில் 2 சதவீத சீட்டுகளை பெற்று இருக்கும் கட்சி தேசிய கட்சி அங்கீகாரத்தை பெறும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி.
அதேபோல மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெற சட்டப்பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். மக்களவைத் தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை தொகுதியில் வெற்றிப்பெற வேண்டும். குறிப்பாக, சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். (தமிழகத்தில் 234 தொகுதிகளில் 7 தொகுதிகளில் வெல்ல வேண்டும்)
ஆனால், இந்த விதிகளுக்கு கட்சிகளும் உட்படாத நிலையில்தான் கட்சிகள் அங்கீகாரத்தை இழக்கின்றன. இதில், பாமக 2014-ம் ஆண்டும், மதிமுக 2006-ம் ஆண்டும் மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இழந்தன. அக்கட்சிகள் அங்கீகாரத்தை மீட்கவும் தங்களது சின்னத்தை நிலைநிறுத்தவும் போராடி வருகின்றன. அதற்குத்தான் தொகுதி எண்ணிகைகளை அதிகரிக்கவும், தனித்த சின்னத்தில் நின்று வாக்கு வங்கியை உறுதி செய்யவும் கட்சிகள் திட்டமிடுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT