Published : 05 Mar 2024 07:31 PM
Last Updated : 05 Mar 2024 07:31 PM
திருநெல்வேலி: “அய்யா வைகுண்டர், கால்டுவெல் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தவறாக பேசியுள்ளார்” என சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு கருத்து தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்துக்கு உட்பட்ட விஜயாபதியில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம் ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் 143 பயனாளிகளுக்கு ரூ.75 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “1833-ம் ஆண்டு அய்யா வைகுண்டர் அவதரித்தார். அந்த காலகட்டத்தில் அவரது சமூகத்தில் பிறந்தவர்கள் இந்து ஆலயம் அமைந்துள்ள தெருவில் செல்ல முடியாது. கோயிலுக்குள் நுழைய முடியாது. பெண்கள் மார்பில் துணி அணியக் கூடாது. ஆண்கள் தலைப்பாகை கட்டக் கூடாது என்ற நெருக்கடியான காலத்தில் அவர் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் முடிசூடும் பெருமாள்.
அப்போது சனாதன தர்மம் உச்சத்தில் இருந்தது. திருவாங்கூர் மகராஜா, அய்யா வைகுண்டரின் பெயரை முத்துக்குட்டி என்று மாற்றினார். சனாதன ஆதிக்க சக்திகளுக்கு எதிராக அய்யா வைகுண்டர், கடவுள் அவதாரமாக வந்து மக்கள் அனைவரும் சமம் என சொல்லி புது வழிமுறையை கொண்டுவந்தார்.
சமத்துவம், சமதர்மம், சாதி, மதம், இனத்துக்கு அப்பாற்பட்டு மனித இனம் ஒன்று என்ற உயர்ந்த குறிக்கோளை கொண்டு வந்தார். அவருக்கு சனாதான வாதிகளால்தான் துன்பம் வந்தது. அதனை எதிர்த்துப் போராடி சமதர்மத்தை நிலைநாட்டியவர். அவரை சனாதனவாதி என்று சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இதுபோல் கால்டுவெல் வட அயர்லாந்தில் பிறந்து லண்டனில் படித்து இந்தியாவிற்கு வந்தார். இந்தியாவில் 18 ஆண்டு காலம் படித்தார். 18 மொழிகளை கற்றுத் தேர்ந்தார். அந்த காலகட்டத்தில் தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள் சமஸ்கிருத்தில் இருந்து தோன்றியது என்ற தோற்றத்தை உருவாக்கி இருந்தார்கள். அதனை மாற்றி திராவிடத்துக்கும், சமஸ்கிருதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, திராவிட மொழி தனி மொழி, உலகில் தோன்றிய மூன்று மொழிகளில் தமிழ் மொழி முதலில் தோன்றியது என்பதை ஆய்வு செய்து, தமிழில் இருந்துதான் பிற மொழிகள் தோன்றின என்பதை நிரூபித்தார். சொல்வதை கேட்க வேண்டும், இல்லை என்றால் சொந்தமாக தெரியவேண்டும். இரண்டும் இல்லாமல் ஆளுநர் தவறுதலாக பேசுகிறார்” என்றார் அப்பாவு.
ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது என்ன? - அய்யா வைகுண்ட சுவாமியின் 192-வது அவதார தின விழா மற்றும் மகா விஷ்ணுவின் அவதாரம் வைகுண்டசுவாமி அருளிய சனாதன வரலாறு என்ற புத்தக வெளியீட்டு விழா கிண்டி ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி, பங்கேற்று நுாலை வெளியிட்டு பேசியது: “அய்யா வைகுண்ட நாராயணரின் அவதாரம் தோன்றிய சமூக கலாச்சார காலக்கட்டத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். சனாதன தர்மத்துக்கு ஊறு ஏற்படும்போது கடவுள் நாரயணன் அவதாரம் எடுக்கிறார். அப்படியான அவதாரமாக வைகுண்டர் 192 ஆண்டுகளுக்கு முன் தோன்றினார். ராமேசுவரம், காசி ஆகியவை நாட்டுக்கு பொதுவானவை.
கிறிஸ்தவம் ஐரோப்பாவுக்கு செல்லும்முன் இந்தியாவுக்கு வந்தது. வெளியில் இருந்து வந்த சிலர், நம் நாட்டின் சனாதன தர்மத்தின் படி அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை அழிக்க முயன்றனர். சனாதன தர்மத்துக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் ராமர், கிருஷ்ணர், வள்ளலார், அய்யா வைகுண்ட நாராயணன் போன்றோர் அவதாரங்களை எடுத்துள்ளனர்.
1757-ல் பெங்கால் மகாணத்தைக் கைப்பற்றிய கிழக்கிந்திய கம்பெனி, தொடக்கத்தில் வணிகத்தில் மட்டுமே ஈடுபட்டது. மொழி, கலாச்சாரம் மற்றும்பண்பாடுகளில் வேறுபட்டு இருந்தாலும், இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடாக திகழ்ந்தது. குறிப்பாக, மக்கள் சனாதன கோட்பாட்டின் அடிப்படையில் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். இந்தஒற்றுமை கிழக்கிந்திய கம்பெனிக்கு, இந்தியாவை அடிமைப்படுத்த பெரும் சவாலாக இருந்தது. அதற்காக, சனாதன தர்மத்தை அழிக்க பிரிட்டிஷ் அரசு தீர்மானித்தது.
அமெரிக்கா, கனடா போன்றபல்வேறு நாடுகளை அடிமையாக்கியதை போல், சனாதன தர்மத்தை அழிப்பதன்மூலம், இந்தியாவை அடிமையாக்கவும் பிரிடிஷ் அரசு முடிவெடுத்தது. இந்தியாவை ஆள்வதற்கு, அதற்கு கிறிஸ்தவ மதமாற்றத்தை பிரிட்டிஷ் அரசு கொள்கையாக கொண்டது.
கடந்த 1813- ம் ஆண்டு பள்ளிபடிப்பை முடிக்காத பிரிட்டிஷ்காரர்களான கால்டுவெல், ஜி.யு. போப் ஆகியோர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது. மெட்ராஸ் மகாணத்தில் மக்களை கிறிஸ்தவ மதமாற்றத்துக்கு உட்படுத்தினர்.
ஆங்கிலேயர்கள் தங்களது ஆட்சிக் காலத்தில் சனாதன தர்மத்தை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தியாவில் சனாதானத்தை அழிக்கவும், கிறிஸ்தவமதத்தை பரப்பவும் 1830-ல்பிரிட்டிஷ் அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது. அனைத்து மக்களுக்கான சேவையை மத்திய அரசு வழங்கி வருகிறது. வரும் 2047-ம் ஆண்டில் வளர்ந்த நாடாக இந்தியா மாறும்” என்று ஆளுநர் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT