Published : 05 Mar 2024 05:09 PM
Last Updated : 05 Mar 2024 05:09 PM
சென்னை: "எங்கள் மீதுள்ள கரிசனத்துக்கும், அக்கறைக்கும் ஜெயக்குமாருக்கும், அதிமுகவுக்கும் விசிக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதுதான் முதன்மையானது" என்று அதிமுகவின் கூட்டணி அழைப்புக்கு திருமாவளவன் பதில் கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், "மக்களவைத் தேர்தலில் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும். அதன்படி, தெலங்கானாவில் 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம்.
ஆந்திராவில் இண்டியா கூட்டணியை வழிநடத்தும் காங்கிரஸோடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கர்நாடகாவில் விசிக ஆறு இடங்களில் போட்டியிடவுள்ளது. கேரளாவில் இடுக்கி உட்பட மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறோம். இண்டியா கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிப்பதனால், ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் எங்கள் வேட்பாளர்களால் பாஜக வேட்பாளர்கள் பயன்பெறக்கூடிய வகையில் வாக்குபிளவு நேர்ந்துவிட கூடாது என்பதில் கவனம் செலுத்துகிறோம். ஆந்திராவில் கூட்டணியில் வாய்ப்பளித்தால் கூட்டணியில் இணைந்து போட்டி. இல்லையேல் விசிக தனித்து போட்டியிடும்.
தொகுதிப் பங்கீட்டில் இன்னும் திமுகவிடம் இருந்து அதிகாரபூர்வ அழைப்பு வரவில்லை. அழைப்பு விடுத்தும் உடனடியாக பேசுவோம். வாய்ப்பு இருந்தால் முதல்வரை சிந்திப்போம். தொகுதிப் பங்கீட்டில் முதல்கட்ட பேச்சுவார்த்தை தான் முடிந்துள்ளது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. முதல்கட்ட பேச்சுவார்த்தையில் நாங்கள் விடுத்த கோரிக்கை அப்படியே உள்ளது. இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தையில் தான் சூழலுக்கு ஏற்ப எங்கள் முடிவுகளை எடுப்போம்.
எங்களின் பலம் குறித்து நாங்கள்தான் மதிப்பீடு செய்ய முடியும். எங்கள் பலம் எங்களுக்கு தெரியும் என்கிற நம்பிக்கையில் தான் எங்கள் கோரிக்கையும் முன்வைக்கிறோம்.
எங்கள் மீதுள்ள கரிசனத்துக்கும், அக்கறைக்கும் ஜெயக்குமாருக்கும், அதிமுகவுக்கும் விசிக சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எங்களை பொறுத்தவரை இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது தான் முதன்மையானது. தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு அடிப்படையில் ஒரு முடிவை எடுக்க முயற்சிக்கப்போவதில்லை. நாட்டு நலன் கருதி, மக்கள் நலன் கருதி இந்தத் தேர்தலை கருத்தியல் போராக அணுகுகிற காரணத்தினால் திமுக கூட்டணியில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பயணித்து வருகிறோம். அந்த நிலைப்பாட்டில் இருந்து நாங்கள் மாறப்போவதில்லை.
போட்டியிடக் கூடிய தொகுதிகளின் எண்ணிக்கை நாங்கள் விரும்பியது போலவோ அல்லது விருப்பத்துக்கு மறாகவோ இருக்கலாம். ஆனால், எங்களின் விருப்பதை விட பாஜகவிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும். அந்த அடிப்படையில் திமுக கூட்டணி என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்" என்று திருமாவளவன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT