Published : 05 Mar 2024 04:33 PM
Last Updated : 05 Mar 2024 04:33 PM
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள வழக்கின் விசாரணையை மார்ச் 25 மற்றும் 26-ம் தேதிகளுக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2001-2006-ம் ஆண்டுகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய் துறை அமைச்சராக ஒ.பன்னீர்செல்வம் பதவி வகித்தார். அந்த காலக்கட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துகள் குவித்ததாக, 2006-ல் திமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத் குமார், தம்பி ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, மதுரை நீதிமன்றத்தில் இருந்து சிவகங்கை நீதிமன்றத்துக்கு மாற்றி 2012-ம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இந்த நிலையில், மீண்டும் அதிமுக ஆட்சி பொறுப்பேற்றபின், பன்னீர்செல்வம் மீது வழக்கு தொடர்வதற்காக அளித்த அனுமதியை திரும்பப் பெற்று, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனக் கூறி, வழக்கைத் திரும்பப் பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் சிவகங்கை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையை ஏற்ற நீதிமன்றம், பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து 2012-ல் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்வது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.
இந்த வழக்கு இன்று முதல் இறுதி விசாரணைக்கு தேதி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதன்படி வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்குகளில் மூத்த வழக்கறிஞர் இன்றும் நாளையும் ஆஜராகி வாதிட இயலாததால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை மார்ச் 25 மற்றும் 26-ம் தேதிகளுக்கு தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT