Published : 05 Mar 2024 04:15 PM
Last Updated : 05 Mar 2024 04:15 PM
சென்னை: தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் வழக்கறிஞர்கள் தங்கள் உண்ணாவிரத அறப்போராட்டத்தை கைவிடக் கோரி, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றான “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ்மொழியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதுகுறித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு பல கடிதங்கள் எழுதியுள்ளார். மேலும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையிலேயே தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, தமிழக முதல்வர் தன்னுடைய உரையிலேயே ‘தமிழை வழக்காடு மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும’ என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களின்போது, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 16வது பக்கத்தில் “4.உயர்நீதி மன்ற வழக்காடு மொழியாக தமிழ்” என்ற தலைப்பில் “இந்தி அல்லது மாநில மொழிகள் உயர்நீதி மன்றங்களின் தீர்ப்புகளிலும் ஆணைகளிலும் பயன்படுத்தப்படலாம்” என அலுவலக மொழிகள் சட்டம், 1963 பிரிவு 7ல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக மாநில சட்டப் பேரவை தீர்மானம் இயற்றி, அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டால். குடியரசுத் தலைவர் அந்த தீர்மானத்தை ஏற்று உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் எனவும் மத்திய அலுவலக மொழிச் சட்டம் தெளிவாகக் கூறியுள்ளது.
இதற்கேற்ப, மறைந்த முதல்வர் கருணாநிதி, முதல்வராக இருந்த நேரத்தில் தமிழை நீதிமன்ற மொழியாக்கிட வேண்டும் என்ற தீர்மானத்தை 6-12-2006 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றியது. தொடர்ந்து, ஆளுநரின் பரிந்துரையுடன் இத்தீர்மானம் 11-2-2007 அன்று மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
எனினும், இதுகாறும், மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், தமிழை நீதிமன்ற மொழியாக ஆக்கிடும் தீர்மானத்தை, மத்திய அரசு உடனடியாக ஏற்று ஆணை பிறப்பிக்க திமுக தொடர்ந்து வலியுறுத்தும்.” என வாக்குறுதி அளித்திருப்பதோடு, தொடர்ந்து தற்போதைய தமிழக முதல்வரும் அதையே வலியுறுத்தி வருகிறார்.
எனவே, தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் வழக்கறிஞர்கள் தங்கள் உண்ணாவிரத அறப்போராட்டத்தை கைவிடக் கோரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்துக்கு அருகில், தமிழை சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் தமிழ் மக்கள் இயக்கம், உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்குரைஞர் செயல்பாட்டுக் குழு ஆகியவற்றின் சார்பில் 25 பேர் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT