Published : 05 Mar 2024 11:15 AM
Last Updated : 05 Mar 2024 11:15 AM
ஒரு கட்சியை விட அதன் தேர்தல் சின்னம் மிகவும் பிரபலமாகிவிடும். தற்போது, அதிமுக கட்சி பழனிசாமி வசம் வந்துவிட்டாலும் கூட, இன்னமும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுவதும், இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கக் கூடாது என்று தேர்தல் கமிஷனிடம் புகார் மனு அளிக்கப்பட்டிருப்பதும் இதனால்தான். எம்.ஜி.ஆர். நிறுத்திய அதிமுக வேட்பாளரை அக்கட்சியின் சின்னமான இரட்டை இலை தோற்கடித்து, கட்சியை விட சின்னமே வலிமையானது என்று உணர வைத்த சுவாரசிய வரலாறு உண்டு!
1972-ல் எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுக, 1973-ல் திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தல், 1974-ல் கோவை மேற்கு சட்டமன்றத் தேர்தலிலும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றிபெற்றது. எம்.ஜி.ஆரும் கட்சியின் சின்னத்தைக் குறிப்பிட இரண்டு விரல்களைக் காட்டி பிரச்சாரம் செய்ய இரட்டை இலை மக்கள் மனதில் பதிந்துபோனது.
1977-ம் ஆண்டு முதன்முதலில் சட்டமன்றப் பொதுத் தேர்தலை எம்.ஜி.ஆர். சந்திக்கிறார். தமிழகத்தில் அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்திலேயே அக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
அந்தத் தொகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தபடி பிரச்சாரம் செய்த எம்.ஜி.ஆர். ஒரு தொகுதியில் மட்டும் இரட்டை இலைக்கு வாக்களிக்காதீர்கள் என பிரச்சாரம் செய்தார். அது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி. தாராபுரம் தொகுதியில் முதலில் அய்யாசாமி என்பவரைத்தான் அதிமுக வேட்பாளராக எம்.ஜி.ஆர். அறிவித்தார்.
கட்சி சின்னமான இரட்டை இலையில் போட்டியிட மனு தாக்கல் செய்வதற்காக அதிமுக சார்பில் அவருக்கு அதிகாரபூர்வமாக விண்ணப்ப படிவங்கள் அனுப்பப்பட்டு அய்யாசாமி மனுதாக்கலும் செய்துவிட்டார்.
ஆனால், அவரைப் பற்றி கட்சியினரிடம் புகார்கள் எழுந்ததால் கடைசி நேரத்தில் அவருக்கு பதிலாக அலங்கியம் பாலகிருஷ்ணன் என்பவரை வேட்பாளராக எம்.ஜி.ஆர். அறிவித்தார்.
என்றாலும், ஏற்கெனவே கட்சியின் அதிகாரபூர்வ படிவங்களை தாக்கல் செய்த அய்யாசாமிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டது. அலங்கியம் பாலகிருஷ்ணனுக்கு சிங்கம் சின்னம் கிடைத்தது. தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆர். சிங்கம் சின்னத்தில் பாலகிருஷ்ணனுக்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்தார்.
ஆனால், அதையும் மீறி இரட்டை இலைக்கு மக்கள் வாக்களித்தனர். தனக்கு அடுத்தபடியாக வந்த காங்கிரஸ் வேட்பாளரை விட 2,500-க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட அய்யாசாமி வெற்றிபெற்றார்.
எம்.ஜி.ஆர். ஆதரவு பெற்று சிங்கம் சின்னத்தில் போட்டியிட்ட அலங்கியம் பாலகிருஷ்ணன் 3-வது இடத்துக்குப் போனார். மக்களின் மனதில் ஒரு கட்சியைவிட அதன் சின்னம் வலிமையாக பதிந்து போனதை தமிழகம் உணர்ந்தது. அதனால்தான் சின்னத்தைத் தக்க வைக்க கட்சிகள் போராடுகின்றன!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT