Published : 05 Mar 2024 10:54 AM
Last Updated : 05 Mar 2024 10:54 AM
மதுரை: மக்களவைத் தேர்தல் தேதி இன் னும் அறிவிக்கப் படாத நிலையில் தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என கட்சிகள் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் கடந்த வாரம் பிரதமர் மோடி பல்லடம், நெல்லைக்கு வந்து சென்ற பின்பு தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த பரபரப்புக்கு இடையே பிரதமர் மோடி நேற்று சென்னையில் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளார். தமிழகத்தில் பாஜக தேர்தல் பணியை சில மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டது. பல இடங்களில் கட்சியின் சின்னத்தை முன்னிறுத்தி பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு மத்திய, மாநில அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை பயன்படுத்த பாஜக திட்டம் வகுத்துள்ளது. இவர்களுக்காகவே பாஜகவில் தனி அணி உருவாக்கப்பட்டு மாநிலம், மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் மத்திய, மாநில அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை கட்சியில் சேர்க்கும் பணி பாஜக அரசு தொடர்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மத்தியிலும், மாநிலத்திலும் தலா 40 அரசு துறைகள் உள்ளன. இந்த 80 துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளை நேரில் சந்தித்து கட்சியில் சேர்க்கவும் அல்லது ஆதரவாளர்களாக மாற்றவும், தேர்தல் நேரத்தில் இவர்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன் படுத்தவும் பாஜக அரசு தொடர்பு பிரிவு நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து அரசு தொடர்பு பிரிவு மாநில செயலாளர் ராஜ ரத்தினம் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், அவர்கள் குடும்பத்தினரை சந்தித்து பேசி வருகிறோம். பணியில் இருந்த காலத்தில் அவர்களால் பலனடைந்தவர்கள் ஏராளமானோர் இருப்பர். இவர்களை ஓய்வு பெற்ற அதிகாரிகள் மூலம் அணுகி தேர் தலில் பாஜகவுக்கு வாக்களிக்க செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்.
ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு, பயனாளிகள் விவரங்கள் தெரிந்திருக்கும். அந்த விவரங்கள் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படும். ஓய்வு பெற்ற அதிகாரிகள் முழுமையாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவர் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT