Published : 05 Mar 2024 05:58 AM
Last Updated : 05 Mar 2024 05:58 AM

நாட்டின் முதலாவது விரைவு ஈனுலை: கல்பாக்கத்தில் பிரதமர் தொடங்கினார்

கல்பாக்கத்தில் விரைவு ஈனுலையை நேற்று தொடங்கி வைத்த பிரதமர் மோடி, உலை செயல்பாடு குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தார்.

சென்னை: நாட்டிலேயே முதல்முறையாக கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 மெகாவாட் மின் உற்பத்திக்கான முதல் உள்நாட்டு விரைவு ஈனுலையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

‘தற்சார்பு இந்தியா’ கொள்கையின் அடிப்படையில், 500 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட நாட்டின் முதலாவது விரைவு ஈனுலை, கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஈனுலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஈனுலையை திறந்து வைத்த பிரதமர், ‘கோர் லோடிங்’ பணி தொடங்கப்பட்டதையும் பார்வையிட்டார். அணு உலையின் பெட்டகம், கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை சுற்றிப்பார்த்தார். அணு உலையின் முக்கிய அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் பிரதமர் கேட்டறிந்தார்.

இந்தியாவின் மிக மேம்பட்ட அணு உலை - முன்மாதிரி விரைவு உற்பத்தி உலையை கட்டுவதற்கும், இயக்குவதற்கும் ‘பாரதிய நாபிகிய வித்யுத் நிகம்’ (பாவினி) என்ற நிறுவனத்தை உருவாக்க மத்திய அரசு கடந்த 2003-ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட இந்திய தொழில் நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புடன் புரோட்டோ வகை விரைவு ஈனுலை முழுமையாக வடிவமைக்கப்பட்டு உள்நாட்டிலேயே கட்டப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை, விரைவு ஈனுலை ஒரு மேம்பட்ட 3-ம் தலைமுறை உலை ஆகும். அவசரநிலை ஏற்பட்டால் ஆலையை உடனடியாகவும், பாதுகாப்பாகவும் மூடுவதை உறுதி செய்யும் செயல் திறன் மிக்க பாதுகாப்பு அம்சங்கள் இங்கு உள்ளன. அணுக்கழிவுகள் உருவாக்கமும் இதில் கணிசமான குறையும். இதனால், பெரிய அளவிலான அகற்றல் வசதிகள் தேவை இல்லை.

தற்போதைய ‘கோர் லோடிங்’ பணி முடிந்ததும், முக்கியமான நிலைக்கான முதல் அணுகுமுறை பணிகள் நிறைவடையும், இதன் பிறகு, மின்உற்பத்தி தொடங்கும். இந்த ஈனுலை செயல்பாட்டுக்கு வந்தால், ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக வணிக ரீதியில் இயங்கும் விரைவு ஈனுலை கொண்ட 2-வது நாடாக இந்தியா இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x