Published : 21 Feb 2018 12:35 PM
Last Updated : 21 Feb 2018 12:35 PM
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா என்ற இடத்தில் ஏரியில் 5 பேரின் சடலங்களை திங்கட்கிழமை அம்மாநில போலீஸார் கண்டெடுத்தனர். வனத்தை ஒட்டிய பகுதியில் இருந்த ஏரியில் அவர்களது சடலங்கள் இருந்ததால் செம்மரம் கடத்தலுக்குச் சென்றவர்கள் தப்பிக்க முயன்றபோது ஏரியில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சடலமாக இருந்தவர்களின் உடல்களில் காயங்கள் இருந்ததுடன் அவர்களது பைகளும் நீரில் மிதந்ததால் அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவியது. இதனிடையே, சடலமாக மீட்கப்பட்ட 5 பேர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது.
5 பேரும் கல்வராயன் மலையில் உள்ள கருமந்துறையை அடுத்த அடியானூர் கிரான்காடு பகுதியைச் சேர்ந்த முருகேசன் (42), ஜெயராஜ் (25), முருகேசன் (42), சின்னபையன் (45) மற்றும் கீழாவரை கிராமத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் (23) ஆகியோர் ஆவர்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஆந்திரவிலிருந்து அவர்களது உடல்கள் சொந்த கிராமங்களுக்கு எடுத்து வரப்பட்டது.
ஆம்புலன்ஸில் அவர்களது உடல்கள் கொண்டு வரப்பட்டபோது அடியனூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர், பழங்குடியினர் நலச்சங்கம் அமைப்பினர் தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படங்கள்: எஸ்.குரு பிரசாத்
5 தமிழர்கள் மரணத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும், தமிழக - ஆந்திர அரசு இழப்பீடாக தலா 30 லட்சம் வழக்க வேண்டும் என்றும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தின. போலீஸார் அங்கு வந்து சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் ஐவரின் உடலும் அவர்களது சொந்த கிராமங்களுக்கு கொண்டு வரப்பட்டு அதிகாலை 4 மனியளவில் அடக்கம் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT