Published : 05 Mar 2024 04:02 AM
Last Updated : 05 Mar 2024 04:02 AM
சிவகாசி: கோடை காலம் தொடங்கும் முன்னரே, சிவகாசியில் வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் முன் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி மாநகராட்சிக்கு மானூர் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 34 லட்சம் லிட்டர், வெம்பக்கோட்டை அணை மூலம் 21 லட்சம் லிட்டர் மற்றும் கிணறு, ஆழ்துளைக் கிணறு உள்ளிட்ட பிற உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் 28 லட்சம் லிட்டர் என நாள் ஒன்றுக்கு 80 லட்சம் லிட்டருக்கு மேல் குடிநீர் கிடைக்கப் பெற்று, வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. சிவகாசி மாநகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடந்த 2018-ம் ஆண்டு ரூ.170 கோடி மதிப்பில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது.
இதற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் இருந்து குழாய் பதிக்கப்பட்டு, வெம்பக் கோட்டையில் நீரேற்று நிலையமும், சிவகாசி மாநகராட்சியில் 17 மேல் நிலை குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டன. இதற்காக, மாநகராட்சி 25 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அவற்றில் 370 தெருக்களில் குழாய்கள் பதிக்கப்பட்டு, 38,670 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன. சிவகாசி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கான தாமிரபரணி கூட்டுக் குடிநீர் விநியோகத்தை, கடந்த ஆண்டு மே மாதம் சங்கரன் கோவிலில் நடந்த விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதன் மூலம் சிவகாசி மாநகராட்சிக்கு தினசரி 80 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கப்பெற்று, ஒரு நபருக்கு தினசரி 135 லிட்டர் வீதம் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், திட்டம் தொடங்கப்பட்டு 10 மாதங்களை கடந்தும், தற்போது வரை குடிநீர் விநியோகம் தொடங்கப்படவில்லை. தற்போது, வெம்பக் கோட்டை அணையில் நீர் இருப்பு உள்ளதால், தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைத்து வருகிறது. தற்போது, கோடை காலம் தொடங்கும் முன்னரே சிவகாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
இதனால், அணைகள், குளங்களில் நீர்மட்டம் குறைந்து கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையர் கிருஷ்ண மூர்த்தியிடம் கேட்டபோது, சிவகாசி மாநகராட்சியில் 9 பகுதிகளில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் நிறைவடைந்து உள்ளதாக, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்பகுதிகளில் ஆய்வு செய்த பின், குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கோடை காலம் தொடங்கும் முன் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தை முழுமையாகச் செயல் பாட்டுக்கு கொண்டு வந்து, தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT