Last Updated : 08 Feb, 2018 09:22 AM

 

Published : 08 Feb 2018 09:22 AM
Last Updated : 08 Feb 2018 09:22 AM

தென் மாவட்ட ரயில்வே திட்டங்களுக்கு குறைவான நிதி: மத்திய பட்ஜெட் குறித்து பயணிகள் சங்கங்கள் அதிருப்தி

தென்மாவட்ட ரயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக, பயணிகள் சங்கங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடந்த 1-ம் தேதி 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது ரயில்வே துறைக்கு ரூ. 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். இவ்வாறு தாக்கல் செய்யும்போது ரயில்வே திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு போன்ற விபரங்கள் அன்று வெளியிடப்படவில்லை. நேற்று முன்தினம் ரயில்வே வாரியம் தனது இணையதளத்தில் ரயில்வே திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, புதிய திட்டங்கள் எதாவது அறிவிக்கப்பட்டுள்ளதா போன்ற விபரங்களை வெளியிட்டுள்ளது.

தமிழக திட்டங்கள்

அதன்படி தமிழக பகுதிகளில் தற்போது நடைபெற்றுவரும் திட்டங்கள் விவரம்:

புதிய ரயில்பாதைகள்: மதுரை – தூத்துக்குடி வழி அருப்புகோட்டை 143.5 கி.மீ, திண்டிவனம் - செஞ்சி – திருவண்ணாமலை 70 கி.மீ, திண்டிவனம் - நகரி 179.2 கி.மீ, அத்திபட்டு – புத்தூர் -88.30 கி.மீ, . ஈரோடு – பழநி 91.05 கி.மீ, சென்னை - கடலூர் வழி மகாபலிபுரம் 179.28 கி.மீ, ஸ்ரீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி – 60 கி.மீ, மொரப்பூர் - தர்மபுரி – 36 கி.மீ.

இருவழிபாதை பணிகள்: விழுப்புரம் - திண்டுக்கல், தஞ்சாவூர் - திருச்சி பொன்மலை, கன்னியாகுமரி – திருவனந்தபுரம், மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி, மணியாச்சி – நாகர்கோவில்.

அகலபாதையாக மாற்றும் பணிகள்: வேளாங்கண்ணி – திருத்துறைபூண்டி, காரைக்கால் - பேரளம், புனலூர் - செங்கோட்டை, திருவாரூர் - காரைக்குடி, திருத்துறைபூண்டி – அகஸ்தியம்பள்ளி, நீடாமங்கலம் - மன்னார்குடி, மன்னார்குடி – பட்டுகோட்டை, தஞ்சாவூர் -பட்டுகோட்டை, மதுரை – போடி.

இத்திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் குறைவாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

குமரி -திருவனந்தபுரம்

கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் வரை உள்ள 85கி.மீ. பாதையை இருவழிபாதையாக மாற்றும் திட்டத்துக்கு கடந்த 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒப்புதல் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை கடந்த மாதம் ரயில்வே அமைச்சர் அடிக்கல் நாட்டினார். மொத்த திட்ட மதிப்பீடு - ரூ. 1,431.90 கோடி. பட்ஜெட்டில் ரூ. 100 கோடியே பத்து லட்சம் மட்டுமே தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில் - மதுரை

நாகர்கோவில் - மதுரை பாதையை இருவழிப்பாதையாக மாற்ற மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி 159 கி.மீ தூரம் ஒரு திட்டமாகவும், மணியாச்சி – திருநெல்வேலி – நாகர்கோவில் 102 கி.மீ தூரம் ஒரு திட்டமாக என இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி பாதை பணிகளின் திட்ட மதிப்பீடு ரூ. 1,182.31 கோடி எனவும், நாகர்கோவில் - மணியாச்சி பாதை திட்ட மதிப்பீடு ரூ. 1,003.94 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் நாகர்கோவில் - மணியாச்சி இருவழிபாதை பணிகளுக்காக ரூ. 75 கோடியும், மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி திட்டத்துக்கு ரூ. 75 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை மிகவும் குறைவு.

நிறைவேறுமா திட்டங்கள்?

குறைவான நிதி ஒதுக்கீடு காரணமாக இப்பணிகள் திட்டமிட்ட காலத்தில் முடிவுறாது என்று தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகி பி.எட்வர்ட் ஜெனி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: கன்னியாகுமரி - கூடங்குளம் - திருச்செந்தூர் - தூத்துக்குடி - சாயல்குடி - ஏர்வாடி - ராமநாதபுரம் - காரைக்குடி வரை புதிய ரயில்வே இருப்புபாதை அமைக்க ஆய்வு செய்யுமாறு 2008-09-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 462.47 கி.மீ தூரத்தில் ரூ.1,965 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதை திட்டம் குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை.

குமரி மாவட்டத்தில் உள்ள ஆளுரிலிருந்து நாகர்கோவில் வழியாக கூடங்குளம் அருகில் உள்ள செட்டிகுளத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்க தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணிக்கு கடந்த 2013-ம் ஆண்டு ரயில்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. திருநெல்வேலியிலிருந்து சங்கரன்கோவிலுக்கு புதிய ரயில் பாதை அமைக்க தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணிக்கு கடந்த 2013-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிகுறிகளே தெரியவில்லை என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x